×

விபத்து ஏற்படுத்தியதாக பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது: இந்தியா கடும் கண்டனம்

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்ல முயன்றதாக  இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் இருந்த பாகிஸ்தான் துணை தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் உளவு பார்த்ததாக கூறி சமீபத்தில் மத்திய அரசு அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது. 2 பேரும் விசா பிரிவில் பணியாற்றிவந்த அதிகாரிகள் ஆவர். இந்நிலையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பணியாற்றி வந்த இரண்டு இந்திய தூதரக அதிகாரிகள் மாயமானதாக செய்திகள் வெளியாயின. ஆனால் விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று காலை தூதரக சாலையில் சென்ற உயர்ரக கார் ஒன்று, நடைபாதையில் சென்றவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்ல முயன்ற காரை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதில் இருந்த இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் இந்திய தூதரக அதிகாரிகள் என்பது தெரியவந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகள் கைது செய்யப்பட்டதுக்கு கடும் கண்டனம் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

கடந்த சில நாட்களாக இந்திய தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கள் தீவிரமாக கண்காணித்துவந்ததற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச்சில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சார்பில் அதிகாரிகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதப்பட்டது. இதில் மார்ச் மாதத்தில் நடந்த இதுபோன்ற 13 சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், இந்த சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக விசாரிக்க வேண்டும், மீண்டும் இதுபோன்றவை நடப்பது தவிர்க்கப்படவேண்டும் என்றும் கூறி  இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Pakistan ,embassy officials ,Indian ,embassy officers , Pakistan, Indian embassy officials, 2 arrested, India
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...