×

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பணப் பிரச்னை காரணமா?: போலீஸ் தீவிர விசாரணை

மும்பை: பணப் பிரச்னை காரணமாக இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) நேற்று முன்தினம் மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்டார். இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய  இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுஷாந்த் கடந்த 6  மாதங்களாகத் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததால், அவர் தற்கொலை செய்து  கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.மேலும், சுஷாந்த் சிங் இறந்தபோது அவருடைய வீட்டில் அவருடைய சகோதரியும் நண்பர்களும் இருந்ததால் அவர்களிடம் காவல்  துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் காலை 10  மணிக்கு தூங்க செல்கிறேன் என்று கூறிவிட்டு சுஷாந்த் சென்றுள்ளார். மதியம்  1.30 மணியாகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பின்பே  அவரின் நண்பர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் அவர்  தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவரது அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. பிரேத  பரிசோதனையில் அவர் தற்கொலை செய்தது உறுதியானது. பின்னர் பீகாரில் உள்ள அவரது தந்தையிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

டோனி படத்தால் பிரபலமான சுஷாந்த், கடைசியாக சிச்சோரே என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி பெற்றபோதும், சுஷாந்துக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தில் பெச்சாரா என்ற படத்தில் மட்டுமே அவர் நடித்தார். அந்த படம் ரிலீசுக்கு தயாராக இருந்தது. பிரபலமாகி வந்தபோது, திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல்போனதும் பண பிரச்னை ஏற்பட்டதும் அவரது மன அழுத்தத்திற்கு காரணம் என கருதப்படுகிறது. சுஷாந்த் தங்கியிருந்த குடியிருப்பிலும் அவரது லைஃப்ஸ்டைல் காரணமாக அவரை அங்கிருந்து காலி செய்யும்படி நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. அவர் ₹4.50 லட்சம் வாடகை கொடுத்து அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். இவ்வளவு பெரும் தொகை கொடுத்து வந்தவருக்கு பண பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். சுஷாந்த்  சிங்கின் மரணம் குறித்து டிவிட் செய்துள்ள பிரபல சிகை அலங்கார நிபுணர்  சப்னா பவானி, ‘கடந்த சில ஆண்டுகளாக சுஷாந்த் மிகவும் கடினமான சூழலில் தான்  இருந்தார். அது ரகசியமல்ல. தொழில்துறையில்  யாரும் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை. அவர்கள் உதவி கரம் கொடுக்கவில்லை.  இன்றைய டிவிட்கள் இந்த துறை எவ்வளவு மேம்போக்கானது என்பதற்கு சாட்சி. இங்கே  யாரும் உங்கள் நண்பர் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார். நண்பர்கள் பலர் சுஷாந்தை விட்டு சென்றதும் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட காரணமாக கூறப்படுகிறது.

இதற்கிடையே,  பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சுஷாந்தின் மாமா கூறுகையில், ‘சுஷாந்த் தற்கொலை  செய்து கொள்வார் என்று குடும்பத்தினர் கொஞ்சம் கூட நம்பவில்லை.  தற்கொலைக்கு பின்னால் சதி இருப்பதாக தெரிகிறது. அவர் தற்கொலை செய்து  கொள்ளவில்லை, மாறாக அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்’ என்றார். இவர் அரியானாவில்  போலீஸ் அதிகாரியாக உள்ளார். இதற்கிடைேய,  நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  ஜான் ஆதிகர் கட்சியின் (ஜேஏபி) தேசியத் தலைவரும், பீகார் மாநிலத்தின்  முன்னாள் எம்.பி.யுமான பப்பு யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

மயங்கி விழுந்த தந்தை
நடிகர் சுஷாந்த் சிங் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் பாட்னாவில் உள்ள தன் தந்தை  கே.கே.சிங்கிடம் ேபசியுள்ளார். கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி கூறியுள்ளார். சுஷாந்த் தற்கொலை செய்த தகவல் கேட்டதும் அதிர்ச்சியில் அவரது தந்தை மயக்கமடைந்தார். ஓய்வுபெற்ற அரசு  ஊழியரான கே.கே.சிங், பல ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

நவம்பரில் திருமணம்
பீகாரில் உள்ள சுஷாந்தின் உறவினர் ஒருவர் கூறுகையில், ‘இந்த ஆண்டு நவம்பரில் சுஷாந்த் திருமணம் செய்து கொள்ள  திட்டமிட்டிருந்தார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங்  விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தார். அப்போது, வருங்கால  மனைவி குறித்து அவர் பெயரை வெளிப்படுத்தவில்லை’ என்றார்.

வாய்ப்பு பறிப்பு
சிலர் அவரது பட வாய்ப்புகளை பறித்து வந்ததாக கூறப்படுகிறது. பாலிவுட்டில் நடக்கும் பார்ட்டிகளில் அவரை புறக்கணித்ததாகவும் சுஷாந்தின் நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.

Tags : Actor , Actor Sushant Singh,Suicide Money, Laundering, Police Intense Inquiry
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி