×

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தங்கும் அறை வாடகையில் கமிஷன் கேட்கும் அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் 10 சதவீதம் கமிஷன் கேட்டு அதிகாரிகள் மிரட்டுவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் தொடங்கிய பிறகு, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அப்போது முதல் தமிழகம் முழுவதும் அனைத்து ஓட்டல்கள், கடைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. . பல தொழில்கள் முடங்கின. இதில் ஓட்டல் தொழில் முக்கியமானது. குறிப்பாக நட்சத்திர ஓட்டல்கள் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றன. வெளிநாட்டு விமானங்கள் இயங்காததால், சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் நின்று விட்டது. நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படும் கருத்தரங்கு, விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாததால் அந்த தொழில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த, வெளிமாவட்டங்களில் இருந்து டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஓட்டல்களில் அறைகளை சுகாதாரத்துறை எடுத்துள்ளது. இதற்காக சென்னை நகரில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களை அவர்கள் மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் ஓட்டல் நிர்வாகம்தான் முழு பொறுப்பு என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டது.
இதைத் தவிர சென்னையில் பணியாற்றும் டாக்டர்களும் குறிப்பிட்ட நாள் பணியாற்றிய பிறகு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கும் நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான சாப்பாட்டையும் ஓட்டல் ஊழியர்கள் தினமும் வழங்கி வந்தனர்.

ஓட்டல் நிர்வாகம், வைரஸ் தாக்குதல் அச்சத்தையும் மீறி மருத்துவர்களுக்காக ஓட்டல்களை வழங்கியுள்ளது. ஊழியர்கள் வேலை பார்க்க பயந்தாலும், அவர்களுக்கு தைரியத்தையும், பக்கபலமாக நாங்கள் இருப்போம் என்ற உறுதிமொழியையும் வழங்கி பணியாற்ற வைத்துள்ளனர்.சென்னை நகரைப் பொறுத்தவரை ஓட்டல்களை ஏற்பாடு செய்வதற்கான முழு பொறுப்பும் ராஜிவ்காந்தி மருத்துவமனையின் டீன் ஜெயந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஒரு டாக்டருக்கு தங்கும் அறை மற்றும் நட்சத்திர அந்தஸ்தில் உணவு வழங்க ₹2500 வழங்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஓட்டல் நிர்வாகத்திடம் ஜெயந்தி தலைமையிலான அதிகாரிகள் பேசி ஏற்பாடு செய்தனர். அவர் ஓட்டல்களை புக் செய்திருந்தாலும், அந்தக் கட்டணத்தை நேரடியாக அவர் கொடுக்க முடியாது. ஓட்டல் நிர்வாகம், உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் மதுசூதன ரெட்டி ஆகியோருக்கு பில் அனுப்ப வேண்டும். அவர்கள் டீனுக்கு அனுப்பி பணம் கிடைக்க ஏற்பாடு செய்வார்கள். தற்போது இந்த உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய அதிகாரிகள் சிலர் ஓட்டல் நிர்வாகத்திடம் உங்களுக்கு பணம் கிடைக்க வேண்டும் என்றால் ஒரு டாக்டருக்கு ஆகும் செலவான ₹2500ல் 10 சதவீதம் அதாவது ₹250 கமிஷனாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்காது. இந்தப் பணம் எங்கள் துறையில் உயர் அதிகாரி மற்றும் எங்கள் துறையின் மேலிடம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. மேலிடம் சொல்லித்தான் கமிஷனை கேட்கிறோம் என்று மிரட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் கூறும்போது, கொரோனா காலத்தில் ஓட்டல் தொழில் முற்றிலும் நொடிந்து விட்டன. சரி, டாக்டர்கள் தங்குவதற்கு கேட்கிறார்கள் என்பதற்காக கொரோனா அச்சத்தையும் மீறி, ஒரு சேவையாக கருதி ஓட்டல்களை கொடுக்கிறோம். எங்கள் ஓட்டலில் வேறு யாரையும் நாங்கள் தங்க வைக்க முடியாது. டாக்டர்கள் மட்டுமே தங்க வைக்க முடியும். ஆனால், ஓட்டல் மின்சாரம் முழுமையாக இருக்க வேண்டும், சமையல் செய்வதற்காக ஆட்கள் வேண்டும், உணவுகளை பேக்கிங் செய்ய வேண்டும், அதை அறைகளில் தங்கியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும். இதனால் ஓட்டல் அனைத்து வசதிகளுடன் முழுமையாக இயங்க வேண்டும்.

அவர்கள் வழங்கும் பணம் எங்கள் ஓட்டலை நடத்துவதற்கே போதாது. சரி, மூடியிருப்பதற்கு பதில், குறைந்த வருமானத்திலாவது நடத்தலாம், நாமும் சேவை செய்ததுபோல இருக்கும் என்று கருதித்தான் டாக்டர்களை தங்க அனுமதிக்கிறோம். ஆனால் இந்த நேரத்தில் எங்களிடம் கமிஷன் கேட்பது எந்த வகையில் நியாயம். மேலிடத்துக்கு கொடுக்க வேண்டும் என்கின்றனர். இந்த கமிஷனைக் கூடவா மேலிடம் கேட்பார்கள். ஆனால் 2 குறிப்பிட்ட அதிகாரிகள்தான் எல்லா ஓட்டல்களுக்கும் சென்று கமிஷன் கேட்டு மிரட்டி வருகின்றனர். கமிஷன் தராவிட்டால், ஊரடங்கு முடிந்த பிறகு உணவு சரியில்லை, சுகாதாரமாக இல்லை என்று கூறி மூடிவிடுவதாக மிரட்டுகின்றனர் என்றனர். இதுகுறித்து விளக்கம் கேட்க, இந்தப் பிரிவின் அதிகாரி மதுசூதனரெட்டியிடம் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் போனையே எடுக்கவில்லை. சிலர் பதில் சொல்ல மறுத்து விட்டனர்.

ஒரு டாக்டருக்கு ஆகும் செலவான ₹2500ல்  10 சதவீதம் அதாவது ₹250 கமிஷனாக கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பணம் கிடைக்காது. இந்தப் பணம் எங்கள்
துறைஉயர் அதிகாரி மற்றும் மேலிடம் வரை கொடுக்க வேண்டியுள்ளது.

Tags : commission ,doctors ,Corona , Officials,commission, doctors' lodging rent ,Corona patients
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...