×

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு: அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. நாடு முழுவதும் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மருத்துவ படிப்புகளில் சேர முடியாத நிலை இருந்து வருகிறது. அவர்களில் சிலர் தற்கொலை செய்வது உள்ளிட்ட சில விபரீத சம்பவங்களும் நடந்துள்ளது. இது தமிழகம் முழுவதும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுகுறித்து ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரைக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழுவை கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு தனது ஆய்வை முடித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கடந்த 8ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அப்போது பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலாளர் சண்முகம், பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் உள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தனது அறிக்கையில், “நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கலாம்” என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று, தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது மாடியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால்  மருத்துவ படிப்பில் சேர 10 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசர  சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் தற்போது தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் இன்னும் ஓரிரு நாளில் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து, அவசர சட்டம் பிறப்பிப்பார் என்று கூறப்படுகிறது. தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், தற்போது 12ம் வகுப்பு தேர்வு எழுதி, நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதன்மூலம் அரசு பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.

Tags : government school students ,Cabinet ,NEET Examination , 10% Internal Provision, Government School Students ,NEET Examination, Cabinet Approves Emergency Law
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு