×

கோரிமேட்டில் மருத்துவ கண்காணிப்பு இல்லை; புதுச்சேரிக்குள் தடையின்றி நுழையும் சென்னை கார்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

புதுச்சேரி: கோரிமேடு எல்லையில் மருத்துவ கண்காணிப்பு இல்லாத நிலையில் சென்னையிலிருந்து கார்கள் புதுச்சேரிக்குள் தடையின்றி நுழைந்து வருகின்றன. இதனால் நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், அதே வேளையில் மாநில வருவாயை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கில் பெருமளவில் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

முதலில் மார்ச் மாதம் ஒற்றை இலக்கில் இருந்த கொரோனா மே மாதம் இரட்டை இலக்கில் இருந்தது. தற்போது 3 இலக்க நம்பரை தொட்டுள்ள நிலையில் இதுவரை 200க்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த ஊழியர்களும் அச்சமடைந்துள்ளனர். இதனிடையே மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணியில் தளர்வுகளை காவல்துறை அளித்துள்ளதாக தெரிகிறது. இதனால் வெளிமாநில வாகனங்கள் தினமும் சிரமமின்றி புதுச்சேரிக்குள் வந்து செல்கின்றன. சென்னையில் இருந்தும் கார்கள் புதுச்சேரிக்கு வருகிறது.

இவ்வாறு புதுச்சேரிக்குள் நுழையும் வெளிமாநிலத்தவரை கண்காணிக்க மாநில எல்லைகளில் மருத்துவ குழு நியமிக்கப்பட்டு 24 மணி நேர பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வெளிமாநிலத்தவரின் பெயர், முகவரி, செல்போன் நம்பர், ஆதார் உள்ளிட்ட விபரங்களை சேகரித்ததோடு உடலின் வெப்ப அளவீடு பரிசோதனை பணியையும் மேற்கொண்டு வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக புதுச்சேரி கோரிமேடு எல்லையில் மருத்துவக் குழு பணியில் இல்லை. கோரிமேடு மதர்தெரசா மற்றும் பல் மருத்துவக்கல்லூரியில் இருந்து பணியாளர்கள் அங்கு பணிக்கு சுகாதாரத்து துறையால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் சில நாட்களாக அவர்கள் யாரும் வரவில்லை.

இதனால் போலீசார் மட்டுமே வெளிமாநில வாகனங்களை நிறுத்தி இ-பாஸ் விதிகளை பார்வையிட்டு வருகின்றனர். அத்தியாவசிய பணிக்கு வருபவர்களை அனுமதித்து வருகின்றனர். இ-பாஸ் மட்டும் காட்டி விட்டு சென்னை கார்கள் சிரமமின்றி புதுச்சேரிக்குள் அடிக்கடி வந்து செல்கின்றன. வெளிமாநிலத்தில் இருந்து நுழையும் நபர்களின் விபரமும், பரிசோதனையும் எதுவும் நடைபெறாததால் பணியில் இருக்கும் காவலர்களே தற்போது நோய் தொற்று கலக்கத்தில்
உள்ளனர். எனவே அங்கு மீண்டும் மருத்துவ பரிசோதனைகளை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக இயக்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.


Tags : Puducherry ,Madras , Korimedu, Medical Monitoring, Puducherry, Chennai Cars
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு