×

சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசலில் சிக்கி தவிக்கும் விக்கிரமங்கலம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் சாலையின் இருபுறம் உள்ள ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விக்கிரமங்கலத்தில் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரை சுற்றியுள்ள 15 கிராமங்களுக்கு தாய் கிராமமாக விக்கிரமங்கலம் திகழ்கிறது. மேலும் பானாமூப்பன்பட்டி, எரவார்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், முதலைக்குளம், அய்யனார்குளம், கொடிக்குளம், காடுபட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

மதுரை, செக்கானூரணி, உசிலம்பட்டி, சோழவந்தான், வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு சாலையின் இருபுறமும் உள்ள கடைக்காரர்கள்  தாழ்வாரம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த கடைகளுக்கு வருபவர்களும் டூவீலர்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும் மீன், காய்கறி உள்ளிட்ட தற்காலிக கடைகளும் சாலைகளை ஆக்கிரமித்துள்ளன. இதனால் மதுரை ரோடு, சோழவந்தான் ரோடு, உசிலம்பட்டி ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோட்டில்  வாகனங்கள் அடிக்கடி நெரிசலில் சிக்கி, நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vikramangalam ,Wickramangalam , Roadside Occupation, Wickramangalam
× RELATED ஆக்கிரமிப்புக்கு துணைபோவது தேசவிரோதம்.! ராகுல்காந்தி குற்றச்சாட்டு