×

கரூர் பஸ்களில் காணாமல் போன சமூக விலகல், முககவசம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் வேலைகக்காக கிராமங்களில் இருந்து நகர பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் கரூர் வந்து செல்கின்றனர். பேருந்துகள் இயக்கம் துவக்க நாட்களில் சமூக விலகலுடன் பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர். அதன் பின்னர் விதிமுறைகளை கடைபிடிக்காத நிலை உள்ளது. மேலும் காலை வேளைகளில் இடைவெளி விட்டு பேருந்துகளில் வருகின்றனர். குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் நீண்டநேரம் காத்திருந்து பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். மாலை நேரத்தில் முற்றிலும் நிலைமை மாறி விடுகிறது. வேலை முடிந்து 6 மணி முதல் 7 மணி வரை ஏராளமானோர் வருவதால் நகர பேருந்துகளில் முண்டியடித்து கொண்டு பயணிக்கின்றனர்.

படிக்கட்டுப்பயணம் மட்டும் இல்லை. மற்றபடி 50 முதல் 60 பயணிகள் வரை பயணிக்கின்றனர். பலர் முக கவசம் அணிவதில்லை. அரசு பேருந்துகள் என்பதால் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பொதுமக்கள் அச்சத்துடனேயே வேறுவழியின்றி தினமும் சென்று வருவதாக தெரிவித்தனர். கொரோனா நோய்த்தொற்று முடியும் வரை 60சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும். சானிடைசர், முக கவசம் போன்ற பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். காலை மாலை வேளைகளில் தேவையான கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Karur ,Mukkasavasam , Karur Bus, Social Distortion, Mukkasavasam
× RELATED கரூர் அருகே வீட்டுக்குள் தீயில் கருகி 3 பேர் உயிரிழப்பு