×

நெல்லை, தென்காசியில் வேகமெடுக்கும் கொரோனா; 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணிச்சுமை அதிகரிப்பு: கூடுதல் ஆம்புலன்ஸ் ஒதுக்கப்படுமா?

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 108 ஆம்புலன்ஸ் பைலட்டுகள், பணியாளர்களின் பணிச்சுமை உயர்ந்துள்ளது. தினமும் 10 முதல் 20 கொரோனா பாதிப்பாளர்களை அழைத்துவருவதால் ஷிப்ட் முறையில் பணியாற்றுகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம், சென்னை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து வருபவர்களில் பலருக்கு தொற்று உறுதியாவதால் இந்த பரவல் அதிகமாகிறது. மேலும் உள் மாவட்ட அளவிலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா அதிவேகமாக பரவுகிறது.

நாள்தோறும் நெல்லை மாவட்டத்தில் 15 முதல் 20 பேர் வரை அடுத்தடுத்து 108 ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு சேர்க்கப்படுகின்றனர். இதுபோல் தென்காசி மாவட்டத்திலும் கொரோனா நோயாளிகள் ஆம்புலன்சில் அழைத்து செல்வது அதிகரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ெமாத்தம் 34 ஆம்புலன்சுகளும் 2 குழந்தைகளுக்கான 108 ஆம்புலன்சுகளும் ஒரு மொபைல் பைக் ஆம்புலன்சும் உள்ளன. தற்போது கொரோனா நோயாளிகளை மட்டும் அழைத்துவர நெல்லை மற்றும் ெதன்காசி மாவட்டங்களுக்கு தலா 2 ஆம்புலன்ஸ் வீதம் 4 ஆம்புலன்சுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பணி செய்பவர்களுக்கு கவச உடை வழங்கப்படுகிறது.

இந்த ஆம்புலன்சில் பணி செய்யும் பைலட் மற்றும் மருத்துவ தொழில்நுட்பனர்கள் தொடர்ந்து 3 நாட்கள் பணி செய்கின்றனர். அதன் பின்னர் அவர்களுக்கு 4 நாட்கள் தொடர்ந்து ஓய்வு அளிக்கப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இதனால் ஷிப்ட் முறையில் இந்த ஆம்புலன்சில் பணி ெசய்கின்றனர். தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் தங்களது பணிச்சுமை அதிகரித்துள்ளது என பைலட்டுகள், தொழில்நுட்பனர்கள் புலம்புகின்றனர். மேலும் தொற்று பரவல் ஏற்பட்டால் கூடுதல் ஆம்புலன்சு ஒதுக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு கவசம் போன்றவைகளும் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : Corona ,South Asia ,Paddy ,Tenkasi , Paddy, Tenkasi, Corona, 108 Ambulance, workload increase
× RELATED கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?