×

அமெரிக்காவிலிருந்து நன்கொடையாக இன்று இந்தியா வருகிறது 100 வென்டிலேட்டர்கள்

டெல்லி: அமெரிக்கா நன்கொடையாக அளிக்கும் 100 வெண்டிலேட்டர்கள் இன்று இந்தியா வந்தடைகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. அதை தடுப்பதற்கான மருந்து கண்டுபிடிப்பதிலும் பல நாடுகளில் ஆராய்ச்சி நடைபெற்று  வருகிறது. இதற்கிடையே நட்பு நாடுகள் தங்களுக்கு இடையே மருந்து பரிமாற்றத்தையும் மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கேட்டுக்கொண்டதால் மலேரியா நோயை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா, அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. இதற்கு பிரதிபலனாக உயர் தொழில்நுட்ப வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்குவதாக கடந்த மாதம் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கு இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதன்படி முதல் கட்டமாக 100 வென்டிலேட்டர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (திங்கட்கிழமை) இந்தியா கொண்டு வரப்படுகிறது. பின்னர் இவை செஞ்சிலுவை சங்கத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.


Tags : India ,US , US, Donation, Today, India Comes, 100 Ventilators
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!