×

ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாகும் ஆன்லைன் வகுப்பு.. கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்துக! : வைகோ வலியுறுத்தல்

சென்னை : கல்வி தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகளை நடத்தக் கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,கொரோனா  பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன. அதே போல கலைக் கல்லூரிகள், தொழிற் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள், இணைய வழி கற்பித்தல் முறையைப் பின்பற்றி வரத் தொடங்கியுள்ளன.

‘ஸ்மைல் பவுண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்திய ஆய்வில், 56 விழுக்காடு பள்ளி மாணவர்களிடம் அறிவுத்திறன் பேசி இல்லாததால், எந்த முறையிலும் ‘ஆன்லைன்’ வகுப்பில் பங்கேற்க முடியாத நிலை இருப்பதாக தெரிய வந்துள்ளது.இதன் மூலம் இணையவழி கற்பித்தல் முறை என்பது சமூகத்தில் ஏழை எளிய, வசதியற்ற குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக் கனி என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.மேலும் இணைய வழி வகுப்புகளில் பங்கேற்கும் குழந்தைகள், மாணவர்கள் காதொலிக் கருவிகளைப் பயன்படுத்துவதும், கண்கள், காதுகளின் திறனைப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

சமச்சீரற்ற முறையில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் இணையவழி  கற்பித்தல் முறையைக் கைவிட்டு, தொலைக் காட்சிகளின் வழியாக, தொலைக்கல்வி வகுப்புகள் நடத்தும் முறையை மத்திய - மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.தற்போது நெருக்கடியான காலகட்டத்தில் நாடு உள்ளபோது, செயற்கைகோள் மூலம் இயங்கும் கல்விக்கான சேனல்களை இதற்குப் பயன்படுத்தும் வகையில் திறனை அதிகரிப்பதுடன், தனியார் தொலைக்காட்சிகளிலும் கற்பித்தலுக்கான நேரத்தை ஒதுக்கித் தர மத்திய - மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும்.இணைய வழி கற்பித்தலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், சிக்கல்கள், சமச் சீரற்ற முறைகளைக் கருத்தில் கொண்டு தொலைக்காட்சிகள் மூலம் நேரலை வகுப்புகளை நடத்திடும் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vaiko , Poor, students, etaq kani, online, class, educational televisions, vaiko, emphasis
× RELATED தமிழகம் முழுவதும் மக்களிடம் எழுச்சி...