×

கடலூரில் வாகன ஓட்டிகளுக்கு கடும் கட்டுப்பாடு: கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி!

கடலூர்: கடலூர் மாவட்ட எல்லையில் வாகனங்களில் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்பது மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 16,386 நபர்களுக்கு பிசிஆர் சோதனை செய்து அதில் 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கொரோனா சோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் அடிப்படையில் 531 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சுமார் 463 பேர் தற்போது சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. சென்னையில் இருந்து பெரும்பாலானோர் அனுமதி இல்லாமல் மாவட்டத்தில் பிரவேசிப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வரும் நபர்கள் கடலூர் எல்லை வரை வந்து, அதன் பின்னர் மாற்று வாகனத்தின் மூலம் மாவட்டத்திற்குள் பிரவேசிக்கின்றனர்.

இதனால் தொற்று உள்ளவர்களை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து வாகனங்களையும் கடலூர் மாவட்ட எல்லையிலேயே நிறுத்தி கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு வாகனத்தில் வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு பிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். மாவட்டத்தில் குறிப்பாக புதுவை, திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் சோதனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலமாக நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : motorists ,Cuddalore ,district ,Corona , Cuddalore, Driving, Control, Corona Sign, District, Permit
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!