இந்தியாவை மறைமுகமாக பாக். தாக்குகிறதா? ; இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் மாயம்...குழப்பத்தில் மத்திய அரசு

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் இரண்டு அதிகாரிகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,  இந்தியாவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சட்ட அமலாக்கத்துறையினரால் பிடிபட்டுள்ளனர். அவர்கள் இருவரும், தூதரக பணியில் ஈடுபடுவதற்கான தகுதி அற்றவர்கள். எனவே அடுத்த 24 மணி  நேரத்திற்குள் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு பாகிஸ்தான் அதிகாரிகள் எதை உளவு பார்த்தார்கள், எப்படி பிடிப்பட்டார்கள் என்ற விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தியாவின் இந்த தகவலை பாகிஸ்தான் தூதரகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இந்தியாவின் தேச  பாதுகாப்புக்கு எதிராக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் யாரும் எந்த தவறான செயல்களில் ஈடுபடவில்லை’ என விளக்கம் அளித்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் தற்போது மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயமான இருவரும் மத்திய தொழிலக பாதுகாப்பு  படையை சேர்ந்தவர்கள் என்றும் காலை 8.30 மணியிலிருந்து இருவரையும் காணவில்லை என இந்திய தூதரகம் புகார் தெரிவித்துள்ளது.

அண்மையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்ற பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு அதிகாரிகள், இந்திய அதிகாரிகளை துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அதிகாரிகள் காணாமல் போனதாக  கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், மாயமான 2 அதிகாரிகளை மீட்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>