×

மும்பையில் புறநகர் ரயில் சேவை தொடக்கம்: மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் மட்டும் அனுமதி!

மும்பை: கோவிட் 19 வைரஸ் தொற்றால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம் மாநிலத்தின் மும்பை மாநகரத்தின் சில வழித்தடங்களில் புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மராட்டிய அரசால் அடையாளம் காணப்பட்டுள்ள அத்தியாவசிய ஊழியர்களுக்காக புறநகர் ரயில் சேவையை மேற்கு ரயில்வே தொடங்கியிருக்கிறது. காலை 5.30 மணி முதல், இரவு 11.30 மணி வரை 15 நிமிட இடைவெளிகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல்கட்டமாக சர்ச் கேட், விரார் வழித்தடங்களிலும், சில ரயில்கள் தகாணி ரோட் ரயில்நிலையம் வரையிலும் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அங்குள்ள பயணி தெரிவித்ததாவது, நான் உமந்தரில் இருந்து வருகிறேன். பேருந்தில் வந்தால் 4 மணி நேரம் ஆகும். தற்போது ரயில் இயக்கப்படுவதால் ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன்.

மராட்டிய அரசின் சிறப்பு பாஸ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கின்றனர். புறநகரில் இருந்து நகருக்குள் வர இந்த ரயில்தான் வசதியானது. இந்த ரயில் சேவையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. ஒரு சீட்டில் ஒருவர் மட்டுமே அமர்கின்றனர். அனைவரும் முகக்கவசம் அணிந்து பயணிக்கின்றனர் என தெரிவித்தார். புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர்கள் மாநில அரசிடம் இருந்து பெற்ற சிறப்பு அனுமதி அட்டையை காண்பித்த பின்னரே பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பொதுவாக 1200 பயணிகளை ஏற்றி செல்லும் இந்த ரயில்களில் தற்போது சமூக இடைவெளியை கவனத்தில் கொண்டு 700 பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : Doctors ,Mumbai ,Mumbai Suburban , Mumbai, Suburban Rail Service, Startup, Doctors, Government Servants, Permission
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...