×

அருப்புக்கோட்டையில் 800 ஆண்டு பழமையான கோயிலில் ஆனிபிரம்மோற்சவ விழா நடக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை:  கொரோனா  தொற்றுதடுப்பு நடவடிக்கைக்காக  கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் திருவிழாக்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 25ம் தேதி முதல் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் வழிபாட்டுத் தலங்களை  திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் கேரளா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கோயில்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தில்  கோயில்கள் திறக்க அனுமதி வழங்கவில்லை. அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாத கோயில் உள்ளது. இக்கோயில் 1216ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அத்தனை பெருமைகளும் உள்ளது. அருப்புக்கோட்டை பகுதிக்கு மிகப்பெரிய விழாவாக இக்கோயில் திருவிழா ஆனி பிரம்மோற்சவம் 13நாட்கள் நடைபெறும். ஆனி மாதம் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கும். வருகிற 23ம் தேதி கொடியேற்றவேண்டும். ஜூலை 2ம் தேதி திருக்கல்யாணம், ஜூலை3ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். ஒரேநாள் மாலையில் இரண்டு தேர்கள் ரதவீதிகளில் சுற்றி நிலையை வந்தடையும். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். 12ம்நாள் மக்கள் கோயில் மைதானத்தில் குடும்பத்துடன் கூடி ஒலைப்பெட்டியில் பலகாரம் கொண்டு வந்து சாப்பிட்டு மகிழ்வர்.

இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஆணையின்படி இத்திருக்கோயிலில் வழக்கப்படி வரும் 23ம் தேதி தொடங்கி பதிமூன்று நாட்கள் நடைபெறுவதாக உள்ள ஆனி பிரம்மோற்சவ திருவிழா நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பங்கேற்க வழிவகை இல்லை என்று பக்தர்கள், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆனித்திருவிழா நடந்துள்ள நிலையில் இந்த ஆண்டு திருவிழா நடக்குமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர். இதுகுறித்து மீனாட்சி சொக்கநாதர் கோவில் பக்தர்கள் குழு மற்றும் பன்னிருதிருமுறை மன்றத்தினர் கூறுகையில், ``ஆனித்திருவிழாதான் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய திருவிழாவாகும்.

வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருவர். மற்ற மாநிலங்களில் கோயில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி, சபரிமலை போன்ற கோயில்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் தமிழகத்திலும் கோயில்களை திறக்க அனுமதி வழங்கவேண்டும். 80 வருடத்திற்கு மேல் தேரோட்டம் நடந்துள்ளது. ஒருபோதும் திருவிழா நடைபெறாமல் இல்லை. தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக  ரதஉற்சவம் நடக்கவில்லை என்றாலும், கோயிலில் கொடியேற்றி திருக்கல்யாணமாவது நடத்த வேண்டும். வழக்கமாக உற்சவங்கள் மண்டகப்படி உட்பட திருக்கல்யாணம் பக்தர்களுடன் சமூக இடைவெளியில் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்றனர்.



Tags : Aruppukkottai ,Old Temple ,ceremony ,Aniriprammotsavam , Aniriprammotsavam ceremony , Aruppukkottai, 800 year old temple?
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்