×

தமிழகத்தில் 1.5 லட்சம் பேர் பிரசவத்துக்கு காத்திருப்பு களையிழந்த வளைகாப்பு நிகழ்ச்சிகளால் மன அழுத்தத்தில் தவிக்கும் கர்ப்பிணிகள்: கொரோனாவால் பெற்றோரும் பார்க்க முடியாமல் ஏக்கம்

வேலூர்: தமிழகத்தில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிரசவத்துக்கு காத்திருக்கும் நிலையில் களையிழந்த வளைகாப்பு நிகழ்ச்சிகளால் கர்ப்பிணிகள் மன அழுத்தத்தில் தவிக்கின்றனர்.உலக நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க முடியாமல் சுகாதாரத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். சமூக விலகலை கடைபிடிப்பது போன்றவற்றில் பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு அளிக்காததும் இதற்கு காரணம் என்று அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான கர்ப்பிணிகள் பிரசவத்துக்கு காத்திருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.ஆனாலும், வீட்டிலேயே சாதாரணமாக வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் வசிக்கும் பெற்றோரும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் ேதாழிகள் வளைகாப்பு நிகழ்ச்சிகளுக்கு வர முடியாமல் இருப்பதால் கர்ப்பிணிகள் மன அழுத்தத்தில் தவித்து வருகின்றனர்.

இதனால் கர்ப்பிணிகளின் பெற்றோருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒட்டுமொத்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த 20 சதவீதம் பேரில் பெரும்பாலும் முதல் பிரசவத்திற்கு காத்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மன அழுத்தம் வயிற்றில் உள்ள குழந்தையையும் பாதிக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே தற்போதைய சூழ்நிலையில் கர்ப்பிணிகளுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கர்ப்பிணிகளின் பெற்றோர் கூறுகையில், ‘முதல் பிரசவத்தின்போது, பெண்கள் பயந்து கொண்டிருப்பார்கள். அவர்களது பயத்தை போக்கும் விதமாக பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில், வளைகாப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவதில்ைல. இதனால் கர்ப்பிணிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எங்களுக்கும் மகளின் முதல் பிரசவத்துக்கு அருகில் இருந்து கவனிக்க முடியவில்லையே என்று வேதனை ஏற்பட்டுள்ளது. செல்போன் வீடியோ காலில் மட்டுமே பேசி வருகிறோம். ஆனால் நேரில் சந்திக்க முடியாமல் வீடியோ காலில் சந்திக்கும்போது கண்ணில் தண்ணீர்தான் வருகிறது. இந்த கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். விரைவாக மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு’ என்றனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். எனவே, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். முடிந்தவரை குடும்பத்தினர் மட்டுமே வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பு ஏற்படும். அதேபோல் முதல் பிரசவத்துக்கு கர்ப்பிணிகள் தாய் வீட்டிற்கு சென்று பிரசவம் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் அவசியம். ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் கர்ப்பிணிகள் பிரசவம் பார்த்துக் கொள்வதுதான் பாதுகாப்பானது.
கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை அனைவரும் உணர வேண்டும். அதேபோல் கர்ப்பிணிகள் உள்ள வீட்டிற்கு யாராவது வந்தால் கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு ஏற்ப வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு விழா நடந்தது. இதில் கர்ப்பிணி உட்பட குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. வளைகாப்பு விழாவில் நலங்கு வைத்தவர்களிடம் இருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதேபோல் சென்னையில் ஒரே நாளில் 191 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கர்ப்பிணிகள் தங்களை தானே தனிமைப்படுத்திக் கொள்வது அவசியமாகிவிட்டது.

காற்று மாசுபட்டால் சிசுக்கள் பாதிப்பு
குழந்தைகள் பிறந்த 6வது மாதத்தில் பெண்கள் குழந்தையுடன் புகுந்த வீட்டிற்கு செல்வார்கள். இதேபோல் சிலர் குழந்தைகளை சர்வ சாதாரணமாக பைக்குகளில் வெளியே அழைத்துச் செல்கின்றனர். இதுபோன்ற பயணங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு அவசியமானது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதில் அனைவரும் கவனமாக இருக்க மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் தாய் சுவாசிப்பதில் இருந்து தனக்கான காற்றை கருவில் உள்ள குழந்தை எடுத்துக்கொள்ளும். இந்நிலையில் காற்றில் மாசுபாடு இருந்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா ஊரடங்கு மட்டுமின்றி எந்த காலத்திலும் கர்ப்பிணிகள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

1971ம் ஆண்டின் கருக்கலைப்பு சட்டம்
கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தையானது வளர்ச்சியை எட்டிய பிறகு பாதுகாப்பு அளிப்பது மத்திய அரசின் கடமை. இதற்காக கடந்த 1971ம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி 20 வாரங்களுக்கு மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கப்படும் கால அளவை 24 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்தடை சாதனம் பயன்படுத்தும்
45 கோடி பேர்
சமீபத்தில் ஐ.நா. மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘ஊரடங்கு காலத்தில் உலக அளவில் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமாகி இருக்கின்றனர். உலகளவில் 114 நாடுகளை சேர்ந்த 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி வரும் நிலையில், பற்றாக்குறையால் 4.70 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது என்று தெரிவித்திருந்தது. இதனால் அடுத்த 9 மாதங்களில் பிரசவத்துக்காக காத்திருக்கும் கர்ப்பிணிகளின் சராசரி எண்ணிக்கை 30 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

2020 புத்தாண்டில் இந்தியா முதலிடம்
ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறக்கும் குழந்தைகள் குறித்த தகவல்களை யுனிசெப் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி 1ம் தேதி பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெப் கணக்ெகடுப்பில் உலகளவில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 78 குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தது. இதில் அதிகப்பட்சமாக இந்தியாவில் 67 ஆயிரத்து 385 குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2020ம் ஆண்டு புத்தாண்டில் நடந்த குழந்தை பிறப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.


* கருவுறும் பெண்கள் அரசிடம் பதிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறிப்பிட்ட அடையாள எண் அளிக்கப்படும். இதன் மூலம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

* பிறப்பு, இறப்புகளில் 99.5 சதவீதம் மருத்துவமனைகளில் நடக்கிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 9 லட்சத்துக்கும் அதிகமான பிறப்புகளும், 5 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளும் பதிவு செய்யப்படுகிறது.

* தற்போது ஆன்லைனில் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்களில் கியூஆர் அடையாளம் இருக்கும். சான்றிதழில் உள்ள டிஜிட்டல் அடையாளத்தை பயன்படுத்தி இணைய தளம் மூலம் எவ்வித கட்டணம் இல்லாமல் சான்றிதழ்களில் 12 மாதத்துக்குள் விவரங்களை திருத்திக் கொள்ளலாம்.

Tags : babies ,Tamil Nadu ,childbirth ,Corona , 1.5 lakh people,Tamil Nadu waiting ,childbirth stressful ,pregnant babies,Corona
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...