×

30 ஆண்டுகால தண்ணீர் பஞ்சத்தை போக்க களமிறங்கிய விவசாயிகள் அனுமன் நதி தூர்வாரும் பணிகள் துவக்கம்: 32 கிலோ மீட்டர் சீரமைக்க முடிவு

பணகுடி:  பணகுடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் 32 கிலோமீட்டர் தொலைவுக்கு அனுமன்நதியை சீரமைக்கும் பணி விவசாயிகள் சார்பில் துவங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு முகப்பில் இருந்து ஆலந்துறை ஆறு உற்பத்தி ஆகிறது. இதன் குறுக்கே அமைக்கப்பட்ட கஞ்சிப்பாறை அணைக்கட்டு வாயிலாக
இந்நதியானது திருப்பப்பட்டு மேல்நிலை கால்வாய் மூலம் சூறாவழி அணைக்கட்டை சென்றடைகிறது. பின்னர் கீழ்நிலை கால்வாய் மூலம் அனுமன் நதியை வந்தடைகிறது. இதையடுத்து அனுமன் நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட சிவன் பிள்ளை, செந்தில் காத்தாயன், தண்டையார்குளம், செஞ்சட்டி, பெருங்குடி, வடக்கன்குளம், அழகநேரி, கோலியான் குளம், அடங்கார்குளம், சக்கிலியான் பாறை, காஞ்சநேரி ஆகிய 11 அணைக்கட்டுகள் வாயிலாக  47 குளங்கள் பாசனம் பெறுகின்றன. சுமார் 32 கி.மீ. தொலைவுக்கு பாயும்  இந்த அனுமன் நதி கடைசியாக பெருமணலில் கடலில் கலக்கிறது. இதன் மூலம் பாசன வசதி பெறும் 47 குளங்களின் மொத்த நீர் கொள்ளளவு 227.1 மில்லியன் கன அடியாகும். பல்லாண்டுகள் பராமரிக்கப்படாததால் இந்நதியின் பாதைகள் தூர்ந்து பாசன குளங்களுக்கு சரிவர தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயத்தை கைவிட்டு வேறு பணிகளுக்கு செல்லும் நிலைக்கு விவசாயிகள் ஆளாகினர்.
இதனிடையே பணகுடி நகர்ப்பகுதியில் கலக்கும் கழிவுகளால் இந்நதி கழிவுநீர் ஓடையாகவே மாறியது. மேலும், நதியைச் சார்ந்த குளங்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களும் தூர்ந்தன. இதனால் விவசாயம் மட்டுமின்றி குடிநீர் ஆதாரமும் நின்றுபோனதால் தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

  இதையடுத்து அனுமன் நதி பாயும் கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து ‘நம் அனுமன் நதி’ என்ற அமைப்பை உருவாக்கியதோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்நதியை சீரமைக்க முடிவெடுத்து களமிறங்கினர். நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், துணை கலெக்டர்கள்  சிவகுருநாதன், மலர்மேல்மங்கை, ராதாபுரம் தாசில்தார் செல்வன் உள்ளிட்டோருடன்
இந்நதியை கடந்த 6ம் தேதியன்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு முதற்கட்டமாக நதியை அளவீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் 5 பேர் கொண்ட நில அளவையாளர்கள் குழுவினர் கடந்த 3 நாட்களாக அளவீடு செய்து எல்கையை குறிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக பணகுடி, வடக்கன்குளம், சிவசுப்பிரமணியபுரம், இருக்கந்துறை, பெருமணல் ஆகிய 5 இடங்களில் தூர்வாருதல் உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
நம் அனுமன் நதி அமைப்பின் தலைவர் பணகுடியைச் சேர்ந்த பிராங்ளின்,  துணைத்தலைவர் வடக்கன்குளம் பவுல், செயலாளர் ஜான்சன், துணைச் செயலாளர்கள் காவல்கிணறு நீர்நிலைக்குழு பொருளாளர் ரத்தின பாண்டி, லெப்பை குடியிருப்பு மாலவன், பொருளாளர் சிவசுப்பிரமணியபுரம்  பால் பாண்டி, ஒருங்கிணைப்பு பணியிலுள்ள காவல்கிணறு நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்புக் குழுவின் தலைவர் ராமராஜா, துணைச்செயலாளர் ரூபெர்ட், வள்ளியூர் பல்நோக்கு சமூக சேவை நிறுவன இயக்குநர் அன்புச்செல்வன், நெல்லை புற்றுநோய் மைய ஆராய்ச்சி ஆலோசகர் விதுபாலா மற்றும் அந்தந்த கிராமத்தைச் சேர்ந்த நம் அனுமன் நதி நிர்வாகிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி சீரமைக்கும் பணிக்கு வழங்கி வருவதோடு பருவமழைக்கு முன்பாக சீரமைப்பு பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வழித்தடம் முழுவதும் படமெடுப்பு
அனுமன் நதி சீரமைப்பு தொடர்பாக ஒருங்கிணைப்பு குழுவினருடன், நெல்லை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் டீன் சக்திநாதன், விதுபாலா உள்ளிட்டோர் இரு மாதங்களாக கள ஆய்வுகள் மேற்கொண்டனர். அத்துடன் ஒவ்வொரு ஊரில் இருந்தும் இளைஞர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியதோடு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உதவியுடன் ஆற்றின் புவி வழித்தட சர்வே மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  மாவட்ட நிர்வாகம் அனுமன் நதி முழுவதையும் ட்ரோன் மூலமாக படமெடுக்கும் பணியை மேற்கொண்டது. பணகுடியிலிருந்து கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து நதியில் மாசு கலக்காதவாறு தடுக்கும் முயற்சியிலும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

3ல் 1 பங்காக குறைந்தது சாகுபடி
அனுமன் நதியின் மூலம் 47 குளங்கள் தண்ணீர் பெறுகின்றன. இதன்மூலம் ஏறத்தாழ 2600 ஏக்கர் விளைநிலத்தில் இருபோக சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் கால்வாய் ஆக்கிரமிப்பால் நீர் வரத்து தடைபட்டு தற்போது சுமார் 800 ஏக்கர் பரப்பளவிற்கே சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் நன்றாக கிடைத்த காலங்களில் நெல் அதிகம் பயிரிடப்பட்ட நிலையில் தற்போது குறைவாக கிடைக்கும் நீரை கொண்டு பூக்கள், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

ஒரு குடம் தண்ணீர் ரூ.6க்கு விற்பனை
32 கிலோ மீட்டர் தூரம் பாயும் அனுமன் நதியால் காவல்கிணறு, வடக்கன்குளம், ரோஸ்மியாபுரம், பணகுடி, தண்டையார்குளம், கும்பிளம்பாடு, ராதாபுரம், சிவசுப்பிரமணியபுரம், பெருமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்ததோடு குடிநீர் தட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. ஆனால் காலப்போக்கில் ஆற்றில் நீர்வரத்து தடைபட்டதால் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வற்றி கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் கூட மக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.6க்கு விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : water scarcity Farmers ,water shortage ,Manaman River A ,The Brink on Farmers , Farmers , brink, 30-year water ,shortage
× RELATED சங்கரன்கோவிலில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு