×

மருத்துவப்படிப்பில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு; தமிழக அரசியல் கட்சிகளின் மனுக்களை நாளை விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்...!

சென்னை: MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட்  தேர்வு இருப்பது போலவே முதுநிலை  மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை. அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல  ஆயிரம் இடங்களை இப்படி  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக  தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த  மனுக்களை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின்கீழ் வராது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டுக்கு சென்னை  உயர்நீதிமன்றத்தை அணுக வலியுறுத்தி மனுவை திரும்ப பெறுமாறு தமிழக அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, MBBS-ல் மத்திய ஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு கோரி திமுக, மதிமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுகள் தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில், இந்த மனுக்களை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா அமர்வு நாளை விசாரணைக்கு  எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. நாளை நடைபெறவுள்ள விசாரணையில் இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Petitions ,parties ,Tamil ,Madras High Court , 50% reservation for Medicaid OBCs; Petitions of political parties to be heard in Madras High Court tomorrow!
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...