×

உடல்பருமனாக இருப்போர் கொரோனா தொற்று பாதித்தால் உயிரிழக்கும் வாய்ப்புகள் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சென்னை: உடல்பருமன் அதிகமாக இருப்பவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உலகம் முழுவதும் 215 நாடுகளை பாதித்துள்ள கொரோனா வைரஸ் வயதானோரையும், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டோரையும் அதிகம் தாக்கும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக உடல்பருமன் அதிகமாக இருப்போரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் உடல் பருமன் அதிகம் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. உடல் பருமனில் அதிகபட்சமாக உள்ள முதல் 5 நாடுகளில் இந்தியாவும் உள்ளது. 25 சதவீதத்துக்கும் அதிகமான நபர்கள் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டில் பெண்களில் சுமார் 30 சதவீதமும், ஆண்கள் 28 சதவீதமும் உடல்பருமன் உடையவர்களாக இருக்கின்றனர். ஒருவருடைய உடல் எடை, அவரது உயரத்திற்கு ஏற்றபடி தான் இருக்க வேண்டும்.

அதாவது ஒருவரின் உடல் எடையில் இருந்து உயரத்தின் இரு மடங்கை வகுத்தால் கிடைப்பது சரியான உடலுக்கேற்ற எடை விகிதமாகும். உடல் எடை அதிகமாக இருந்தால், நுரையீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ரத்தத்திற்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கொரோனாவுக்கு உயிரிழக்க நேரிடுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி குறிப்பின் படி இதுவரை, கொரோனாவால் உயிரிழந்தோரில் 6 பேர் உடல்பருமன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். பொதுவாக உடல் பருமன் காரணமாக நுரையீரலின் இயக்கமும் பாதிக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல்பருமனோடு இருப்பவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். எடையை குறைக்க தினமும் அரை மணி நேரமாவது நடைபயிற்றியை கட்டாயமாக்கி கொள்ளுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.


Tags : doctors , Obesity, corona, life chances, too much, doctors
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை