×

‘குடிக்க’ வழியில்லாததால் சாப்பிட வர மறுக்கிறார்கள்: கொல்கத்தா உணவக உரிமையாளர்கள் கவலை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் உணவகங்களில் மதுபானங்கள் விற்க அனுமதி உண்டு. ஆனால் கொரோனா ஊரடங்கினால் இங்கு மது வகைகள் விற்பனைக்கு தற்காலிகமாக  தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீடிப்பதால், அங்கு ஓட்டல் தொழில் இழப்பை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக கொல்கத்தாவில் செயல்படும் கிழக்கிந்திய ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் அமைப்பின் செயலாளர் சுதேஷ் போட்டர் கூறியதாவது:
ஊரடங்கு காரணமாக உணவகங்களில் மதுபானங்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் வருவது குறைந்துள்ளது. அதிலும் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் மேலும் குறைந்து காணப்படுகிறது.

இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பது முதல் ஓட்டல் பராமரிப்பு வரையிலான செலவுகளை எதிர்க்கொள்ள கடினமாக இருக்கிறது. குறிப்பாக, கொரோனா தொற்றை தடுக்க சானிடைசர், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மதுபான விற்பனையின் மூலமே 75 சதவீதம் வரை வருவாய் கிடைத்தது. தற்போது பிரத்யேக கடைகளில் மட்டுமே மது விற்பனைக்கு அரசு அனுமதித்துள்ளது. இதனால் சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் குறைந்துவிட்டது. விதிகளை தளர்த்தக் கோரி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். அப்படியானால் மட்டுமே உணவகத் தொழில் புத்துயிர் பெறும், இல்லையென்றால், கடைகளை இழுத்து மூடுவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : restaurant owners ,Kolkata , refuse,no access , drink, Kolkata restaurant, owners are concerned
× RELATED கொல்கத்தா விமான நிலையத்தில் 2 விமானங்கள் உரசி விபத்து: இறக்கைகள் சேதம்