×

ஆன்லைன் தேர்வில் முறைகேடு ரயில்வே கார்டு தேர்வில் வடஇந்தியர் அதிக தேர்ச்சி: மீண்டும் தேர்வை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய தெற்கு ரயில்வே துறையில் 96 சரக்கு ரயில்வே கார்டு பணியிடங்கள் காலியாக இருந்தன. சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்வுகளின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 96 பணிகளுக்கு தமிழகத்திலிருந்து 3000-க்கும் கூடுதலானவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், அவர்களில் வெறும் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் வட இந்தியர்கள் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

துறை சார்ந்த இந்தத் தேர்வை ஆன்லைனில் நடத்தியது தான் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணம் என்று போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற ரயில்வே துறை பணியாளர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இந்தத் தேர்வு சாதாரண முறையில் தேர்வுத் தாளில் விடை எழுதும் முறையில் நடத்தப்பட்ட போது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் மிக அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், ஆன்லைன் முறைக்கு தேர்வு மாற்றப்பட்டவுடன் வட இந்திய பணியாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு முறைகேடுகள் நிகழ்த்தப்படுகின்றன. அதனால் தான் தமிழகத்தைச் சேர்ந்த பணியாளர்களால் சரக்குத் ரயில்வே கார்டு பணிக்கான துறைத் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு புறக்கணிக்கக்கூடியது அல்ல.  எனவே, சரக்கு ரயில்வே கார்டு பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தேர்வுத்தாளில் விடை எழுதும் வகையில் அத்தேர்வை மீண்டும் வெளிப்படையாக நடத்த ரயில்வே துறை முன்வர வேண்டும்.

Tags : North Indian ,Ramadas , Online Exam, Scandal, Railway Card Selection, North Indian, Ramadas
× RELATED கடலூரில் தேர்தல் தகராறில் பெண் கொலை...