×

கொரோனாவை மிஞ்சி உயிர்பறித்த ‘1877’ தாது வருட பஞ்ச கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலூரிலுள்ள கங்கா ஊரணிக்கரையில் விநாயகர்கோயில் அருகே தாதுவருட பஞ்ச கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காளிராசா கூறியதாவது:
 சுமார் இரண்டரை அடி உயரம் ஒன்றரை அடி அகலம் உடைய கல்வெட்டில்  13 வரிகள் எழுதப்பட்டுள்ளன. 1877ம் ஆண்டு மேற்படி ஊரிலிருக்கும் பெரி.மு.நா.நாச்சியப்பன் ஆதிமூல கடவுளர் பேருக்கு வெட்டி வைத்திருக்கும் சண்முக நதி தெப்பக்குளத்திலிருந்து தண்ணீர் பெறுகிற கால்வாய் மேலடி சொல்வார்க்கு திருத்திக் கொடுத்தது தாது வருஷம் என எழுதப்பட்டுள்ளது.  தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுகிற 60 ஆண்டு வட்டத்தில் தாது ஆண்டு என்பது பிரபவ தொடங்கி வரும் ஆண்டுகளில் பத்தாவது ஆண்டு. 1876, 1877ம் தாது ஆண்டில் தொடங்கிய பஞ்சம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்து ஆடியது. பல்லாயிரக்கணக்கான பேரை பலி கொண்டது. தாது வருட பஞ்சத்தை சென்னை மாகாண பஞ்சம் என்றே அழைக்கின்றனர். இப்பஞ்சகாலத்தில் வெள்ளையர் ஆட்சியில் மக்கள் கொத்துக்கொத்தாக உணவின்றி இறந்தனர் என்பர்.

கல்வெட்டில் சொல்லப்படுகிற நாச்சியப்பன் என்பவர் இலங்கை கண்டியை ஒட்டிய பகுதியில் தொழில் செய்து வந்ததாகவும் அதில் கிடைத்த வருவாயில் தன் சொந்த ஊரில் ஊரணியை அமைத்ததாகவும் அவரது வம்சாவளியினரும் ஊர் மக்களும் தெரிவிக்கின்றனர். தாது வருட பஞ்ச காலத்தில் மழையின்மையால் விவசாயம் பொய்த்துப் போய் வறுமையுற்று இருந்த ஊர் மக்களுக்கு ஊரணியை வெட்டும் வேலையை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாத்து இருக்கலாம். தாது வருட பஞ்ச கால கல்வெட்டு கிடைத்திருப்பது இன்றைய கொரோனா ஊரடங்கு மற்றும் உயிரிழப்புச் சூழலில் மக்களின் துன்பத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Corona 1877 , discovery, ore-year inscription ,dating back , Corona 1877
× RELATED கோடை காலத்தில் தடையின்றி குடிநீர்...