×

சேலத்தில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு தூய்மை பணியாளரின் மனைவி பலி: பொதுமக்கள் பீதி

சேலம்: சேலம் மாவட்டத்தில் இதுவரை 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் பாதிப்பு எண்ணிக்கை நீடித்து வருகிறது. சேலம் மாநகரில் கொரோனா பரவலை தடுக்க, கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணியில், 1500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அம்மாபேட்டை மண்டலம் 9வது வார்டில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர் ஒருவரின் மனைவிக்கு, தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரது கணவர் மற்றும் மகன், மகளுக்கும் கொரோனா தொற்று உறுதியானதால், அவர்களும் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே, சிகிச்சை பலனின்றி, தூய்மை பணியாளரின் 45 வயதான மனைவி உயிரிழந்தார். சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவே முதல் பலியாகும். இதனால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. அந்த வார்டில் பணிபுரிந்து வரும் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் மாஜி ராணுவ வீரர் பலி: பர்கூர் அருகே  சின்னசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 63 வயதான முன்னாள் ராணுவ வீரர் கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

டெல்லி தமிழ்நாடு இல்ல ஊழியருக்கு கொரோனா
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை புதூர் நாடு அருகே உள்ள கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் 34 வயது வாலிபர். இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்தார். அதன்பிறகு அங்கிருந்து ரயில் மூலம் திருப்பத்தூருக்கு நேற்று வந்தார். அவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : panic ,Salem ,Corona ,First Life Cleaning Worker ,Coroner , Coroner's first fatal ,clean-up worker's, wife killed,Salem, public panic
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை