×

கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தாமதித்து விட்டது: டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர்

கொரோனா பரவல் அதிகமாவதால், அரசு மருத்துவமனைகளின் படுக்கைகள் போதாத நிலை ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் 1,217ம், தனியார் மருத்துவமனைகள் 1,222ம் என மொத்தம் 2,439 மருத்துவமனைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் 77,532 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 77,843 படுக்கைகளுமாக, மொத்தம் 1,55,375 படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் 3,877 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 3,892 தீவிர சிகிச்சைபிரிவு படுக்கைகள் என மொத்தம் 7,769 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுமருத்துவமனையில் 1,938 வென்டிலேட்டர்களும், தனியாரில் 1,946 வென்டிலேட்டர்களுமாக மொத்தம் 3,884 வென்டிலேட்டர்கள் உள்ளன. இந்த வசதிகளை அதிகப்படுத்த இயலாது. அதற்கு நீண்டகால திட்டமிடல் அவசியம். தனியார்  மருத்துவமனைகள் கடும் கட்டணக் கொள்ளைகளில் ஈடுபடுகின்றன. இதனால் சாதாரண மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு மாநிலங்கள் ஏற்கனவே கட்டணங்களை தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணயித்து விட்ட போதிலும், தமிழக அரசு மிகவும் காலதாமதமாகவே நிர்ணயித்துள்ளது.

காப்பீடு திட்டதின் கீழ் சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில் 25 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இது போதாது. இத்திட்டத்தின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஒரு நாளைக்கு கட்டணமாக ₹9,500 முதல் ₹15,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த திட்டம் முழுமையாக மக்களுக்கு பயன்படாது. ஏனெனில், இத்திட்டத்தின் மூலம் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.


அடுத்து சிகிச்சை பெறும் பொழுது, கொரோனா என்று பரிசோதனை உறுதியாகவில்லை எனில், இந்த காப்பீட்டு நிதி கிடைக்காது. தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு கட்டணங்கள் செலுத்துவது என்பது கூடுதல் செலவை உருவாக்கும். மருத்துவமனை உரிமையாளர்களுக்கு ஒரு நியாயமான வாடகை. மற்ற இதர பராமரிப்பு செலவு. ஊழியர்களுக்கான ஊதியத்தையும் அரசே வழங்கிட வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு செய்ய இயலாது என தமிழக முதல்வர் கூறியுள்ளது சரியல்ல. தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் படி இதை செய்ய முடியும். மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் வராத பிரிவினருக்குமான மருத்துவக் கட்டணங்களையும் அரசு நிர்ணயித்துள்ளது. ஒருநாளைக்கு ₹5000 முதல் ₹15000 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணங்கள் சாதாரண மக்களுக்கு மிக அதிகமானதே. அதே சமயம் இந்தக் கட்டணத்தில் தனியார் மருத்துவமனைகள் எல்லா மருந்துகளையும், சிகிச்சைகளையும் வழங்கும், வழங்க முடியும் என்று சொல்ல முடியாது.

ஏனெனில் பல முக்கியமான மருந்துகளின் விலை மிக மிக அதிகமாக உள்ளது. கொரோனா பரிசோதனை உட்பட அனைத்து பரிசோதனைக் கட்டணங்களும் மிக அதிகமாக உள்ளன. குறிப்பாக ரெம்டிசிவிர் மருந்து மட்டுமே ஒரு நோயாளிக்கு அளித்திட ₹ 1.5 லட்சம் தேவை. டொசிலிசுமேப் மருந்து 400 மில்லி கிராம் ஊசி ஒன்றின் விலை மட்டுமே ₹45000 முதல் ₹90000 வரை விற்கப்படுகிறது. இவை எல்லாம் இந்த கட்டண நிர்ணயத்தில் வராது. இந்த மருத்துகளுக்காக சாதாரண மக்கள் செலவும் செய்ய இயலாது. மருத்துவமனைகளாலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் வழங்க இயலாது. எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண கொரோனா பிரச்னை முடியும் வரை பெரிய தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் அரசே ஏற்று அவற்றின் மூலம் மக்களுக்கு இலவச சிகிச்சைகளை வழங்கிட வேண்டும். மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். அவற்றை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். ஒருநாளைக்கு ₹5000 முதல் ₹ 15000 வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டணங்கள் சாதாரண மக்களுக்கு மிக அதிகமானதே.

Tags : GR Raveendranath ,GR Ravindranath ,General Secretary ,Doctors Association , Government Delays , Setting Charges, Dr GR Ravindranath, General Secretary , Doctors Association
× RELATED எடப்பாடி பழனிசாமி எங்கே? பாதுகாப்பு...