×

சோதனை சாவடியில் சளி பரிசோதனை இல்லை; மும்பையில் இருந்து வந்து அரசு பஸ்களில் 19 பேர் பயணம்: காரில் சொந்த ஊர்களுக்கும் பலர் சென்றதால் பரபரப்பு

நாகர்கோவில்: மும்பையில் இருந்து வந்த 19 பயணிகள், களியக்காவிளையில் தடுத்து நிறுத்தப்படாமல், குமரி மாவட்டத்துக்குள் வந்து அடுத்தடுத்து அரசு  பஸ்களில் ஏறி பயணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க, குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, களியக்காவிளையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை தவிர வேறு எந்த மாவட்டங்களில் இருந்து வந்தாலும் அவர்களிடம் சளி பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து வருபவர்கள் சளி மாதிரி பரிசோதனைக்கு பின், தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானாலும் கூட அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.

மும்பை மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் சளி பரிசோதனைக்கு பின் கண்டிப்பாக 2 வாரங்கள் நிறுவன தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும். பஸ், ரயில் போக்குவரத்து தொடங்கி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மும்பையில் இருந்து கேரளாவுக்கு தினசரி ரயில் வருவதால், அங்கிருந்து தமிழர்கள் அதிகளவில் குமரி மாவட்டம் வருகிறார்கள். திருவனந்தபுரத்தில் இறங்கி, கேரள அரசு பஸ்சில் குமரி - கேரள எல்லையான இஞ்சிவிளையில் இறக்கி விடப்படுகிறார்கள். அங்கிருந்து களியக்காவிளை சோதனை சாவடிக்கு இவர்கள் நடந்து வருகிறார்கள். ஒரு சிலர் ஏற்கனவே புக்கிங் செய்த கார்களில், களியக்காவிளை சோதனை சாவடியில் பரிசோதனை செய்து விட்டு செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு மகாராஷ்டிராவில் இருந்து திருவனந்தபுரம் வந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருந்துள்ளனர்.

இவர்களில் திருவனந்தபுரத்தில் இருந்து கேரள அரசு பஸ்சில் இஞ்சிவிளை பகுதிக்கு வந்தவர்கள், பின்னர் அங்கிருந்து நடந்து நேற்று இரவு களியக்காவிளை சோதனை சாவடிக்கு வந்துள்ளனர். சோதனை சாவடியில் இவர்களிடம் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மட்டும் நடந்துள்ளது. பின்னர் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் திருநெல்வேலி, களக்காடு, நாங்குநேரி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஏற்கனவே உறவினர்கள் கொண்டு வந்திருந்த கார் மூலம் சிலர், களியக்காவிளையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். களக்காடு செல்ல வேண்டிய 19 பயணிகள் மட்டும், களியக்காவிளையில் இருந்து பஸ்சில் வடசேரி பஸ் நிலையம் வந்தனர். பின்னர் வள்ளியூர் செல்வதற்காக, வடசேரியில் இருந்து  திருநெல்வேலி செல்லக்கூடிய பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர்.

இவர்களை பார்த்ததும் கண்டக்டருக்கு சந்தேகம் வந்து விசாரிக்கையில், இவர்கள் மும்பை பாண்டு பகுதியில் இருந்து வந்தது தெரிய வந்தது. எனவே  கண்டக்டரும், டிரைவரும் அவசர, அவசரமாக பஸ்சில் இருந்து இறங்கினர். உங்களை சோதனை நடத்தி தனிமைப்படுத்துதலில் வைக்காமல் எப்படி விட்டனர் என கூறியவர்கள், நாங்கள் பஸ்சை எடுக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகர ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் , சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் உள்ளிட்ட அலுவலர்கள் வந்தனர். அவர்கள் 19 பேரையும் பஸ்சுடன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 19 பேருக்கும் சளி பரிசோதனை நடத்தப்படுகிறது. பரிசோதனை முடிவு வந்த பின் இவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

களியக்காவிளை சோதனை சாவடியில் அலட்சியமா?
மும்பையில் இருந்து வருபவர்களிடம், சளி மாதிரி பரிசோதனை நடத்தி அவர்களை தனிமைப்படுத்துதல் முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் களியக்காவிளை சோதனை சாவடியில் தெர்மல் ஸ்கேனர் மூலம் மட்டும் பரிசோதனை நடத்தியது எப்படி? என கேள்வி எழுந்துள்ளது. ெகாேரானா பரவி வரும் நிலையில் அலட்சியம் காரணமாக மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருதுகிறார்கள்.

சாப்பாடு வாங்கி கொடுத்த அதிகாரிகள்
19 பேரில் குழந்தைகள், பெண்களும் உண்டு. அவர்கள் அதிகாரிகளிடம் நாங்கள் நேற்று மதியம் சாப்பிட்டோம். அதன் பின்னர் சாப்பிட வில்லை. குழந்தைகளும் உள்ளனர். எனவே சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என்று பரிதாபமாக கேட்டனர். இதையடுத்து வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்து  சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் கொடுத்தார்.

பஸ் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு
மும்பையில் இருந்து வந்த 19 பேரும் ஏறி அமர்ந்த அரசு பஸ்சும், மருத்துவக்கல்லூரி அருகே நிறுத்தப்பட்டது. பஸ் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கிருமி நாசினி மூலம் பஸ் சுத்தம் செய்யப்பட்டது. பயணிகள் ஏறி அமர்ந்த அந்த பஸ் 2 மணி நேரம், 3 மணி நேரத்துக்கு பின் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்ட பின்,  புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் கூறினர்.


Tags : Mumbai ,checkpoint , Checkpoint, mucus examination, no
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!