×

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் குறைவான மீன்களுடன் கரை திரும்பினர்

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைகாலம் முடிந்து நேற்று கடலுக்கு சென்ற மீனவர்கள் இன்று காலை குறைவான மீன்பாடுடன் கரை திரும்பினர். கொரோனா ஊரடங்கு தடை, மீன்பிடி தடைகாலம் ஆகியவற்றால் 84 நாட்களுக்கு பிறகு  ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இரவு முழுவதும் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்து விட்டு இன்று காலை 8 மணியளவில் கரை திரும்பினர். மீனவர்களின் படகுகளில் 100 கிலோ முதல் 250 கிலோ வரை இறால் மீன்கள் பிடிபட்டன. இறால் மீன்களை, மீனவர்கள் தரம்பிரித்து விற்பனை செய்தனர்.

மீனவர்களால் பிடித்து வரப்பட்ட இறால் மீன்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி சென்றனர். வழக்கமாக இறால் மீன்பிடிக்க செல்லும் படகுகளில் கடல் நண்டு உள்பட பலவகை மீன்கள் அதிகளவில் இருக்கும். ஆனால் நேற்று இவ்வகை மீன்கள் வழக்கத்தைவிட குறைவாக இருந்தன. மேலும் பாம்பன், மண்டபம் பகுதியிலும் மீன்பிடித்து திரும்பிய மீனவர்களின் படகுகளில் சராசரியாக இறால் மீன்வரத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘‘இந்த முறை மதியம் 1 மணிக்கு மேல் கடலுக்கு சென்றதால் இரவு நேரத்தில் மட்டுமே கடலில் மீன்பிடித்து கரை திரும்பினோம்.

இறால் மீன்பாடு குறைந்ததுடன், படகு ஓட்டத்திற்கான எரிபொருளும் குறைந்துள்ளது. இதனால் நஷ்டம் ஏற்படாமல் ஓரளவிற்கு வருவாய் கிடைத்துள்ளது. குறைந்தளவு இறால் வரத்து உள்ளதால் வியாபாரிகளும் இறால் மீன்களுக்கு உரிய விலையை வழங்க வேண்டும்’’என்றனர்.   

கடற்படை தொந்தரவு இல்லை
ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள கடலோர விசைப்படகு மீனவர்கள் நேற்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழக மீனவர்களின் வருகையை எதிர்பார்த்த இலங்கை கடற்படையினர் தலைமன்னார், கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவை ஒட்டிய கடல் பகுதியில் கடற்படை கப்பல்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அவர்களால் எந்த இடையூறும் ஏற்படவில்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags : Fishermen ,sea ,interception , Pisces, fishermen, fewer fish
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...