×

அசாமின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் 5 நாட்களாக பற்றி எரியும் தீ : எப்படி கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை அதிகாரிகளுடன் இந்தியா ஆலோசனை!!

டிஸ்பூர் : அசாமின் பாக்ஜன் எரிவாயுக் கிணற்றில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை அதிகாரிகளுடன், இந்திய அதிகாரிகள் காணொலியில் ஆலோசித்தனர். அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பக்ஜன் என்ற இடத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிவாயு உற்பத்தி கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் மே 27ம் தேதி முதல் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் முயற்சியில் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கடந்த பத்தாம் தேதி  எரிவாயு கிணற்றில் தீப்பற்றியது. இதன் காரணமாக அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதன் அருகில் செல்ல முடியவில்லை என்றும், சுமார் 10 கிமீ தூரத்தில் இருந்து தான் பார்க்க முடிவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து கிணற்றில் இருந்து எரிவாயு கசிந்துகொண்டே இருப்பதால் தீயின் தீவிரம் அதிகரித்து வருகின்றது. எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடத்தை சுற்றி சுமார் 1.5கி.மீ. தூரத்துக்கு வசித்த சுமார் 6ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  தீயணைக்கும் முயற்சியின்போது தீயணைப்பு வீரர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.இந்நிலையில் தீயைக் கட்டுப்படுத்துவது, எரிவாயுக் கிணற்றை மூடுவது ஆகியவை குறித்து அமெரிக்க எரிசக்தி துறை அதிகாரிகளுடன், பெட்ரோலிய அமைச்சகத்தின் அதிகாரிகள் காணொலியில் விவாதித்துள்ளனர். வெள்ளியன்று நடைபெற்ற ஆலோசனையில் சிங்கப்பூர் வல்லுநர்களும் பங்கேற்றனர். இந்தியா - அமெரிக்கா இடையே எரிசக்தி துறையில் செய்துகொண்ட உடன்பாட்டின்படி இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.


Tags : Bajan ,Assam , Assam, Bajan, Gas, Burning, Fire:
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...