×

அரசு போக்குவரத்து கழகத்தில் நிலுவை தொகை ரூ.1,624 கோடி விரைவில் வழங்கப்படுமா?: ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

நெல்லை: அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் ரூ.1,624.78 கோடியை விரைந்து வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சென்னை அரசு போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், மதுரை, சேலம், விழுப்புரம், நெல்லை, கும்பகோணம் என 8 கோட்டங்கள் மூலம் சுமார் 22 ஆயிரம் பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர்கள், கண்டக்டர்கள், செக்கிங் இன்ஸ்பெக்டர்ள், தொழில்நுட்ப பணியாளர்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு பஸ்களில் ஒரு கோடியே 60 லட்சம் பயணிகள் தினமும் பயணித்து வருகின்றனர். இதன் மூலம் தினமும் சுமார் ரூ.25 கோடி வசூலாகி வருகிறது.

திருவிழா, பண்டிகை, திருமண நேரங்களில் கூடுதலாக வசூலாகும், போக்குவரத்து கழகத்தின் மொத்த வருவாயில் 50 சதவீதம், அதாவது ரூ.350 கோடி தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக கொரோனா ஊரடங்கால் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சுமார் ரூ.1,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி செய்து கடந்தாண்டு ஓய்வுபெற்றவர்கள், விருப்ப ஓய்வுபெற்றவர்கள், பணிக்காலத்தில் இறந்தவர்கள் என 6 ஆயிரத்து 221 தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊதிய ஒப்படைப்பு உள்ளிட்ட பணப்பலன்கள் கடந்த ஓராண்டாக வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படாத நிலை காணப்படுகிறது. இதனால் ஊரடங்கு காலத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.

 சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், அரசு போக்குவரத்து கழகம், மதுரை, சேலம், கும்பகோணம், விழுப்புரம், கோவை, நெல்லை உள்ளிட்ட 8 கோட்டங்களிலும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி ரூ.447.70 கோடி, பணிக்கொடை ரூ.491.23 கோடி, ஓய்வூதிய ஒப்படைப்பு ரூ.401.79 கோடி, விடுப்பு ஊதியம் ரூ.284.06 கோடி என மொத்தம் ஆயிரத்து 624 கோடியே 78 லட்ச ரூபாய் ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படாத நிலை காணப்படுகிறது. இதனால் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில்  பெரிதும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவையாக உள்ள பணப்பலன்களை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



Tags : state transport corporation , Revenue ,Rs 1,624 crore,state transport corporation soon ,Retirement workers expectation
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்