×

நிவாரணம் இல்லை... வங்கிகளில் கடன் மறுப்பு... அரசு அறிவிப்புகள் கண் துடைப்பு... தொழில் நிறுவனங்கள் திறந்திருந்தும் 30% ஆர்டர்தான் கிடைக்கிறது: தொழில்துறையினர் வேதனை

கோவை: தமிழகத்தில் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளன. ஆனால் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த வங்கி கடன்கள் கிடைக்காததாலும், நிவாரணம் இல்லாத காரணத்தினாலும், உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்துள்ளதாலும் தொழில் நிறுவனங்களை திறந்தும் பயன் இல்லை என தொழில்துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். இந்தியா அளவில் 6 கோடியே 70 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 90 சதவீதம் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள்தான். தமிழகத்தில் மட்டும் 12 லட்சம் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதில் கோவையில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. தமிழக அளவில் 1 கோடி பேருக்கு இதன் மூலம் சிறு,குறுந்தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக்  தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும்,  40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில்  கிராமப்புறங்களை சுற்றி  சுமார் 325 பெரிய தொழிற்நிறுவனங்களும்,  மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும்   உள்ளன. உலகளவில் அதிக அளவிலான வெட் கிரைண்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்  கோவை மாவட்டத்தில் மட்டுமே உள்ளன. பம்புகள் தயாரிக்கும் தொழிற்நிறுவனங்கள்  விவசாயத்திற்கு  மிக முக்கிய பங்கு வகுக்கிப்பதால் கோவையில் உள்ள இத்தொழில்  நிறுவனங்கள் இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கோவையில்  குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை  உள்ளனர். அதில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து  வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர்.  ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட்  உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி  தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது  உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.  கோவையில் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 3 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சுமார் 2 மாதம் காலம் வரை செயல்படாமல் மூடங்கி இருந்தது. அதன்பின்பு ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது ஒரு மாத காலமாக தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் மத்திய அரசு அறிவித்த 20 லட்சம் கோடி வங்கி கடன் திட்டம், 3 லட்சம் கோடி சிறு, குறுந்தொழில்களுக்கான கடன் திட்டம் போன்றவை கிடைக்காததாலும், தமிழக அரசு சார்பாக நிவாரணம்  இல்லாத காரணத்தினாலும், உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்துள்ளதாலும்  தொழில் நிறுவனங்களை திறந்தும் பயன் இல்லை என தொழில்துறையினர் வேதனை  தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் கோவை மாவட்டம் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கிற்கு முன்னால் கிடைத்த கொஞ்ச ஆர்டர்களைத்தான் தற்போது தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. புதிய ஆர்டர்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் ஊரடங்குக்கு முன்னர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கவும் பெரிய நிறுவனங்கள் தயாராக இல்லை. தற்போது வெறும் 15 முதல் 20 சதவீதம் வரை மட்டுமே தொழில் நிறுவனங்களில் பணிகள் நடக்கிறது. அந்த பணிகளும்கூட தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சென்றதால் பாதித்துள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி திட்டம் என்பது பெரிய முதலாளிக்கு மட்டுமே பயன் அளிக்கும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் தர மறுக்கிறது. தமிழக அரசு, மத்திய அரசு இரண்டும் எந்த ஒரு வழிகாட்டுதலையும் இன்று வரை வங்கிகளுக்கு அளிக்கவில்லை. பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன. தற்போது மூன்று மாத வாடகை கேட்டு கட்டிட உரிமையாளர்கள் நெருக்கடி தருகின்றனர். மின்சார கட்டணம் கட்ட சொல்லி மின்சார வாரியம் நெருக்கடி அளிக்கிறது.
தொழில் மூடங்கி பண புழுக்கமே இல்லாத நிலையில், வங்கி கடனும் கிடைக்கவில்லை. நிவாரணமும்  இல்லை என்ற நிலையில் தொழில்துறையினர் வாழ்வா? சாவா? என்கிற போராட்டத்தில் உள்ளனர். ஜி.எஸ்.டி., பொருளாதார மந்தநிலை என்கிற நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழில் நிறுவனங்கள் செயல்படுவதில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் தொழில்துறையினர் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொழில்துறையினர் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மன நோயாளியாக மாறிவிடுவார்கள். இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

இந்தியா முழுவதும் தொழில்நிறுவனங்கள் சங்கிலி தொடர் போன்று செயல்படுகின்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் கொண்டுதான் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் இந்தியா முழுவதும் சீரான நிலை ஏற்படும்போதுதான் தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள் பாதிப்பு இல்லாமல் இயக்க முடியும். இது குறித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஊரக தொழில் முனைவோர் சங்கத்தினர்  (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில், காட்மா சங்கத்தின் கீழ் 4500  சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பெரிய நிறுவனங்களின் ஜாப் ஆர்டர்களை  நம்பியே இந்த தொழில் நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசின் சிறு, குறுந்தொழில்களுக்கான 3 லட்சம் கோடி கடன்  திட்டம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இல்லை. சிசி, ஓடி கணக்குகள், பண பரிவர்த்தனை போன்றவைகள் மூலமே கடன் வழங்க வங்கிகள் முன்வருகின்றன.  இதனால் 90 சதவீதம் தொழில் நிறுவனங்கள் பயன்பெற முடியாது. தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும் பவுண்டரிகள் 95 சதவீதம் மூடங்கியுள்ளதால் மூலப்பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. மூலப்பொருட்கள் கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள் தவிக்கின்றன. தொழிலாளர்கள் பற்றாக்குறையை போக்க தமிழகத்தில் பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். 90 சதவீதம் தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கியுள்ளன. இவ்வாறி சிவக்குமார் கூறினார்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம், அந்த விவசாயத்தின் முக்கிய பங்காக பம்பு செட், மோட்டார்கள் உள்ளன. இந்திய அளவில் கோவையில் தயாரிக்கப்படும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்களுக்கு மவுசு அதிகம். சுமார் 80 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க தொழிலாக இது உள்ளது. கோவை மாவட்ட பம்புசெட்  மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில்,  ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு வருவாய்களை இழந்து, தொழில் துறையினர் வாழ்வாதாரத்தை  இழந்து தவித்து வருகின்றன. ஊரடங்குக்கு பின் மீண்டும் தொழிலை புதிதாகத்தான் துவங்கியுள்ளோம். வடமாநிலங்களில் இருந்து மூலப்பொருட்கள் வருகை குறைந்துள்ளதால் தமிழகத்தில் வாங்கப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொழிலாளர் பற்றாக்குறை, உற்பத்தி பாதிப்பு, விற்பனை மையங்கள் முடக்கம் போன்ற காரணங்களால் தற்போது 30 சதவீதம் வரை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 20 லட்சம் கடன் திட்டம் என்பது உடனடி  நிவாரணம் இல்லை. நிபந்தனைகள் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும்.  அதற்கான அறிவிப்புகள் முற்றிலும் இல்லை. 3 மாதம் காலம் இ.எம்.ஐ. தள்ளிவைப்புபோல் இதுவும் ஒரு கண் துடைப்பு அறிவிப்பு மட்டுமே. வங்கிகளுக்கு முறையான  அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லை. அப்படியே வழங்கியிருந்தாலும் அதனை வங்கிகள் ஏற்றுக்கொள்வதில்லை. தொழில்துறையினர் அனைவரும்  மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர். வங்கிகள் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டால் மத்திய நிதியமைச்சரை நேரில் சந்தித்து வங்கிகள் தொடர்பாக புகார் அளிக்க நேரிடும் என்றார்.

ரூ.8  ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதிப்பு
இந்தியாவில் தங்க நகை  உற்பத்தியில்  கோவை 3வது இடத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 200 கிலோ வரை  தங்க நகை  உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கால் மட்டும் ரூ.8  ஆயிரம் கோடி வரை  வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நகைக்கடைகள் திறக்கப்பட்டாலும் தங்கம் விலை உயர்வு, கொரோனா அச்சம் காரணமாக வியாபாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இது  குறித்து கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள்  சங்க தலைவர் முத்து  வெங்கட்ராம் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தங்க நகை  கடைகளில் பெரிய  கடைகள் 50ம், சிறிய கடைகள் 300ம் உள்ளன. தமிழகத்தை  சேர்ந்த பொற்கொல்லர்கள்  30 ஆயிரம் பேரும், வடமாநில பொற்கொல்லர்ள் 15  ஆயிரம் பேரும்  நகைப்பட்டறைகள் அமைத்து பணி புரிந்து வருகிறார்கள். கொரோனா  ஊரடங்கு  உத்தரவு காரணமாக கடைகள் மூடப்பட்டதால் விற்பனை இல்லாமல், தயாரிப்பு   இல்லாமல் தங்க நகை கடைகள் முடங்கியது. தற்போது  கடைகள் திறக்கப்பட்டாலும் வியாபாரம் 30 சதவீதம் மட்டுமே நடக்கிறது. இதற்கு  முக்கிய காரணம் மக்களிடையே நிலவும் கொரோனா அச்சமும், தங்கத்தின் விலை  உயர்வும்தான். தங்க நகைகள் உற்பத்தி குறைவால் பொற்கொல்லர்கள் வேலையிழந்து  தவித்து வருகின்றனர். திருமணம் போன்ற மிகவும் முக்கியமான நிகழ்வுகளுக்கு  மட்டும்தான் தற்போது மக்கள் நகைகள் வாங்க வருகின்றனர். பொற்கொல்லர்களுக்கு  அரசு நிவாரணம் வழங்க வேண்டும், என்றார். தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டாலும் இந்தியா முழுவதும் சீரான நிலை ஏற்படும்போதுதான் தமிழகத்தில் உள்ள தொழில்நிறுவனங்கள் பாதிப்பு இல்லாமல் இயக்க முடியும்.

Tags : banks ,Government announcements , no relief, Debt repayment, banks ,Government announcements wiped out
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்