×

உசிலம்பட்டி அருகே காட்டுப்பன்றிகளால் எழுமிச்சை, முருங்கை நாசம்: விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டி:  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள குஞ்சாம்பட்டி, பேச்சியம்மன்கோவில்பட்டி, நல்லமாபட்டி, நக்கலப்பட்டி, மருதம்பட்டி, பூச்சிபட்டி ஆகிய ஊர்களில் மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் எழுமிச்சை மற்றும் முருங்கை மரங்களை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில் வரும் காட்டுப்பன்றிகள் எழுமிச்சை மரக்கன்றுகளை, அதன் அருகில் மூக்கால் துளைத்து சாய்க்கின்றன. இதேபோல, முருங்கை மரங்களையும் கரடிகள் வேரோடு சாய்ப்பதாக கூறப்படுகிறது. மேலும், சொட்டுநீர் பாசன டியூப்களையும் நாசம் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

குஞ்சாம்பட்டி பொன்னன், தங்கப்பாண்டி ஆகியோர் கூறுகையில், ‘எலுமிச்சை, முருங்கை மரங்களை காட்டுப்பன்றிகள், கரடிகள் நாசம் செய்கின்றன. இப்பகுதியில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு கிடையாது. 2 ஆண்டுகளுக்கு முன்பு நக்கலப்பட்டியைச் சேர்ந்த தங்கத்தை கரடி தாக்கியது. இதில் அவர் பிழைத்தார். கரடி, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றனர். நல்லமாபட்டி பெருமாள்தேவர் கூறுகையில், ‘வனவிலங்குகளால் விளைநிலங்களில் சாகுபடி பாதிக்கப்படுகிறது. விவசாயிகளை யாரும் பாதுகாப்பதில்லை. வெளிமாநிலங்களுக்கு சென்று பிழைக்கலாம் என்றால் கொரோனா அச்சம் உள்ளது’ என்றார். 


Tags : Usilampatti Usilampatti ,Wild Boars , Wild boars, Usilampatti
× RELATED காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 2 பேர்...