×

277 கொரோனா நோயாளிகள் எங்கே ? : போலியான முகவரி, தொலைபேசி எண்கள்.. இருப்பிடத்தைக் கண்டறிய முடியாததால் தொற்று வேகமெடுக்கும் ஆபத்து

சென்னை : சென்னையில் கொரோனா நோயாளிகள் 277 பேரின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியாததால் தொற்று மேலும் வேகமாக பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் நாள் தோறும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி தொற்று உறுதியான 5,038 பேர் வீட்டில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 1,850 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3,289 பேர் அரசு மருத்துவ முகாம்களிலும் மற்றவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் சென்னை மாநகராட்சியின் கணக்குப்படி 277 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று கண்டறிய முடியவில்லை. கடந்த மே மாதம் 23ம் தேதி முதல் 30ம் தேதி வரை கொரோனா பரிசோதனை செய்து உறுதியானவர்களில் 82 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதே போல மே மாதம் 31ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை 112 பேரும், ஜூன் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 3 நாட்களில் 83 பேரும் எங்கு இருக்கிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை.

கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டு தலைமறைவான இந்த 277 பேரும் போலியான முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கொடுத்திருப்பதே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. ஏற்கனவே சென்னையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தலைமறைவாகி உள்ள இந்த 277 பேரால் கொரோனா தொற்று பரவல் மேலும் வேகமெடுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


Tags : Corona , Corona, patients, fake, address, phone numbers
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...