×

நீர் ஆதாரமாக விளங்கும் சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்ட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலப்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மாடம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமரன் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், சித்தாலப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு நீர் ஆதாரத்துக்கு முக்கியமாக சித்தாலப்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் தினமும் சித்தாலப்பாக்கம் கிராம பஞ்சாயத்து சார்பில் டிராக்டர்கள் மூலம் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. சில நேரங்களில் குப்பையை எரிப்பதால் வெளியாகும் விஷவாயு, சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் பயனில்லை. ஏரியை குப்பை கிடங்காக மாற்றி வருகிறார்கள். எனவே, சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பை கொட்டுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சித்தாலப்பாக்கம் கிராம பஞ்சாயத்து சிறப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.



Tags : High Court ,lake ,Sithalapakkam ,Sithalappakkam Lake Garbage Bans: High Court , water source,Sithalappakkam Lake, High Court order
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...