×

சமூக இடைவெளியுடன் பயணம் செய்ய சைக்கிள் ஷேரிங் திட்டம் 10 இடத்தில் தொடக்கம்: ஆயிரம் இ-சைக்கிள்கள் விரைவில் அறிமுகம்

சென்னை: சமூக இடைவெளியுடன் பயணம் செய்யும் வகையில் 10 இடங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னை மாநகராட்சி துவக்கியுள்ளது. விரைவில் 1000 இ-சைக்கிள்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து முடங்கி உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் குறைந்த அளவிலான பொது போக்குவரத்து மட்டுமே தொடங்கியுள்ளது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக பொது போக்குவரத்தை முழுமையாக இயக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றியும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னை மாநகராட்சி மீண்டும் துவங்கியுள்ளது. முதல்கட்டமாக ஷெனாய் நகர், கந்தசாமி கல்லூரி, அண்ணா நகர் மேற்கு, திருமங்கலம், முகப்பேர், சாந்தி காலனி உள்ளிட்ட 10 இடங்களில் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தக்குமார் கூறியதாவது: சென்னையில் தற்போது 50க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 10 இடங்களில் தற்போது இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. இதைத்தவிர்த்து புதிய 500 இ-சைக்கிள்கள் உள்ளிட்ட 1000 புதிய சைக்கிள்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. பழைய சைக்கிகளுக்கு பழைய கட்டணம் வசூலிக்கப்படும். இ-சைக்கிளுக்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். சைக்கிள் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஸ்மார்ட் பைக் நிறுவனத்தின் இயக்க மேலாளர் ராம் கூறுகையில்” தினசரி சைக்கிள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் ைசக்கிள் பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிய வேண்டும். கைகளில் கிருநாசினி வைத்து இருந்தால் சைக்கிளின் கைப்பிடி மற்றும் சீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.” என்றார்.

Tags : travel ,social space,10th Place ,d Soon
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...