×

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு கோரி ஐகோர்ட்டில் அதிமுக மனு

சென்னை: மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் மட்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 1991 முதல் தமிழக அரசு பணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 69 சதவீத ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமும், பட்டியலினத்தவருக்கு 18 சதவீதமும், பழங்குடியினர் பிரிவுக்கு 1 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கான மொத்த இடங்களில் 15 சதவீதத்தையும், மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50 சதவீத இடங்களையும் மத்திய தொகுப்புக்கு வழங்கும் வகையில் மருத்துவ கவுன்சில் ஒழுங்குமுறை விதிகளை 1995ல் கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் மருத்துவ இடங்கள் மற்றும் பல் மருத்துவ  இடங்களை மத்திய தொகுப்புக்கு வழங்கி வருகிறது. இந்த இடங்களில் 27 சதவீத இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்க வேண்டும். ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு மிக சொர்ப்பமான இடமே வழங்கப்பட்டு வருகிறது. 2019-20 கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பிற்கான மத்திய தொகுப்பு மொத்த இடங்களான 9550ல் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு 371 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

இது வெறும் 3.8 சதவீதம் மட்டுமே. இதனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை.
எனவே, மருத்துவ படிப்பு, மருத்துவ மேல்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, பிஜி டிப்ளமா படிப்புகளில் தமிழக அரசு மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யும் இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்குமாறு மத்திய அரசுக்கும், மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : AIADMK , AIADMK petition,50% reservation , later section,the medical study
× RELATED ஓபிசி இடஒதுக்கீடு தீர்ப்பு விவகாரம்.:...