×

மாட்டுக்கொட்டகையில் கூட தங்க இடம் தராமல் பெற்றோரை விரட்டிய மகனிடம் இருந்து சொத்துக்களை எழுதி வாங்கிய போலீசார்: ஜவ்வாதுமலையில் நெகிழ்ச்சி சம்பவம்

போளூர்: ஜவ்வாதுமலையில் மாட்டுக்கொட்டகையில் கூட தங்க இடம் தராமல் பெற்றோரை வீட்டைவிட்டு விரட்டிய மகனிடம் இருந்து, போலீசார் சொத்துக்களை எழுதி வாங்கி பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் செங்கம் தாலுகாவிற்குட்பட்ட பெரிய கீழ்பட்டு மலைகிராமத்தை சேர்ந்தவர்கள் சேமன்(75), டிக்கி(65) தம்பதி. இவர்களுக்கு பலராமன், ராமகிருஷ்ணன் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், சேமன் சம்பாதித்து சேர்த்த 6 ஏக்கர் நிலத்தை 2 மகன்களுக்கும் சமமாக பிரித்து எழுதி வைத்துவிட்டார். கடைசி காலத்தை மகன்கள் வீட்டில் தள்ளிவிடலாம் என வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மூத்த மகன் பலராமன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட இளைய மகன் ராமகிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், ராமகிருஷ்ணன் சரிவர உணவு அளிக்காமல் பெற்றோரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மாட்டு கொட்டகையில் தங்கி கொள்வதாக கூறியும் ராமகிருஷ்ணன் கேட்காமல் விரட்டியுள்ளார்.

இதனால், மனம் நொந்து போன சேமன், டிக்கி தம்பதி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாருக்கும் தெரியாமல் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கம் நகருக்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்து போளூருக்கு வந்து டிஎஸ்பி குணசேகரனிடம் புகார் மனு கொடுத்தனர்.  அவரது உத்தரவின்படி தனிப்பிரிவு போலீசார் ராமகிருஷ்ணன், மூத்த மகனின் மனைவி சென்னம்மாள் ஆகியோரை அழைத்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தினர்.  தலா 80 சென்ட் நிலம் மற்றும் பெற்றோர் வசித்து வரும் வீடு ஆகியவற்றை  எழுதி தந்தனர். இதனால் பிரச்னை முடிவுக்கு வந்தது.



Tags : parents ,lodge ,elasticity incident ,cow house , cow house,property, drove, elasticity ,incident
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்