×

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து 2 நாளாகிறது தூர்வாரும் பணி முறையாக நடக்காததால் கடை மடை பகுதிக்கு செல்வதில் சிக்கல்: வீணாக கடலில் கலக்கும் என விவசாயிகள் குற்றச்சாட்டு

தஞ்சை: மேட்டூர் அணை கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. தூர்வாரும் பணிகள் முறையாக நடக்காததால் கடைமடை வரை தண்ணீர் போய் சேருவதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டும் குறுவை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தற்போது ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மழையின் கருணையால் தண்ணீர் கிடைத்தாலும் அவற்றை சேமிக்க, முறையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆக்ரமிப்பு மற்றும் தூர்ந்துபோனதாலும் இந்த நிலை நீடித்து வருகிறது.இந்நிலையில் ஆறு, வாய்க்கால்கள், வடிகால்களை தூர்வாரவும், நீர்ஒழுங்கிகள், தடுப்பணைகளை சீர் செய்ய அரசு சார்பில் ரூ.67.25 கோடி செலவில் 392 பணிகள் மேற்கொள்ள கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இதேபோல் குடிமராமத்து திட்டத்தின்கீழ் டெல்டா மாவட்டங்களில் 458 பணிகளை ரூ.140.64 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் இந்நேரம் முழு தரத்துடன் முழுமையாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த மே மாதம் இறுதியில் தான் பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு குறுவை பாசனத்திற்காக 8 ஆண்டுக்கு பிறகு ஜுன் 12ம்தேதி (நேற்று முன்தினம்) தண்ணீர் திறக்கப்பட்டது. தூர்வாரும் பணிகளில் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு விட்டதாக அரசு அறிவித்துள்ளது. இதில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 77 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 12ம் தேதி திறந்த தண்ணீர் நாளைதான் தஞ்சை வந்தடையும். எனவே முதலில் தண்ணீர் வரும் பகுதிகளில் இன்றைக்குள்ளும், கடைமடை பகுதிகளில் வரும் 20ம் தேதிக்குள்ளும் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வழக்கம் போல் தூர்வாருவதாக கூறி பணிகள் இழுத்தடிக்கப்படுவதால், இந்தாண்டும் குறுவை சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்டா மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏரி, குளம், பண்ணை குட்டைகள் என 1 லட்சம் நீர் நிலைகள் உள்ளன. அவற்றை முறையாக நிரப்ப வேண்டும். தேவையான காலத்தில் தண்ணீர் விட நீர்மேலாண்மையை கண்டிப்போடு பின்பற்ற வேண்டும்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தற்போது கிராமப்பகுதிகளிலும் அதிகரிக்கத்துவங்கி உள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால் விவசாயம் பாதிக்கும் அபாயம் உள்ளது. பல வாய்க்கால்கள், வடிகால்கள் ஆக்ரமிப்பாலும், செடிகொடிகளால் புதர் மண்டி தூர்ந்துபோய் உள்ள நிலையில் கடைமடை வரை விரைந்து தண்ணீர் சென்றடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் வழக்கம் போல் இந்த ஆண்டும் கடைமடைக்கு தண்ணீர் போய் சேருவதில் சிக்கல் எழுந்துள்ளது. கிராமங்களுக்கு செல்லும் வாய்க்கால் இதுவரை தூர்வாரப்படவில்லை. ஒரு சில வாய்க்கால்கள் தூர் வாரப்படாமல் புதர் மண்டி போய் கிடக்கிறது. இதனால் குறுவைக்கு திறக்கப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறும்போது, இந்த ஆண்டு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு இருந்தது கடந்த ஜனவரி மாதம் அணையை மூடும்போதே அரசுக்கு தெரியும். அப்போதே தூர்வாரும் பணிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை தொடங்காமல் திட்டமிட்டே கால தாமதப்படுத்தி தொடங்கப்படுகிறது என்றனர்.

கடன் வழங்க வேண்டும்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் அதிகாரத்தை பறித்துவிட்டனர். மத்திய கூட்டுறவு வங்கியில் சென்றுதான் விவசாயிகள் கடன் வாங்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து, அதை மாநில அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இது கிராமப்புற விவசாய பொருளாதாரத்தை முடக்கும். தேசிய வங்கிகளில் கடன் வழங்குவதில்லை. மாறாக விவசாயத்துக்கு வழங்கும் நகைக்கடன்களை தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் விவசாய கடனை தள்ளுபடி செய்து அல்லது ஒத்தி வைத்துவிட்டு புதிய கடன் வழங்க வேண்டும் என்றார்.

தரிசாக மாறிய 1000 ஏக்கர்
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் சுகுமாறன் கூறுகையில், காவிரி வடிநிலக்கோட்டம் மேலத்திருப்பூந்துருத்தியில் குடமுருட்டி ஆற்றில் பிரியும் திருத்துக்கால் வாய்க்கால் 80 சதவீதம் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் 1000 ஏக்கர் பாசன வசதியின்றி தரிசாக மாறிவிட்டது. பொதுப்பணித்துறையின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இதில் வரவில்லை என்றார்.

Tags : Mettur Dam ,Mettur Dam Opens , ,water , Mettur Dam , Farmers, allegation
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி