×

கேரளாவில் உருவான ‘கொரோனா தேவி’ கோயில்

திருவனந்தபுரம்: சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும்  வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதித்து இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இந்த வைரசுக்கு பயந்து பலரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.  இன்னும் இதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால் வேறு வழியில்லாமல் கொரோனாவிடமே சரணாகதி அடைய முடிவுசெய்து பலரும் கொரோனா பூஜைகளை நடத்த தொடங்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பீ்கார், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் உள்பட பல மாநிலங்களில் பெண்கள் கொரோனா பூஜை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘கொரோனா மாயி’ என்ற பெயரில் இவர்கள் பூஜை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில்  ஒருவர் வீட்டிலேயே கொரோனா தேவி கோயிலை அமைத்து பூஜை நடத்தி வருகிறார். கொல்லம் மாவட்டம் கடைக்கல் என்ற இடத்தைச் சேர்ந்த அனிலன் என்பவர் தனது வீட்டிலேயே  தனியாக ஒரு அறை அமைத்து கொரோனாவுக்கு கோயில் அமைத்துள்ளார். கொரோனா வைரசின் உருவத்தை தெர்மோகோலால் உருவாக்கி தினமும் அதற்கு பூஜை நடத்தி வருகிறார். இதுகுறித்து அனிலன் கூறியதாவது: இந்து மதக் கோட்பாட்டின்படி தெய்வம் தூணிலும், துரும்பிலும் என எல்லா இடத்திலும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இறைவன் இந்த கொரோனா வைரசிலும் இருப்பார் என நான் நம்புகிறேன்.

அதனால் தான் கொரோனா தேவி கோயிலை உருவாக்கி உள்ளேன். இந்த கோயிலில் யாருக்கும் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. நான்தான் தினமும் பூஜைகள் நடத்தி வருகிறேன். கொரோனா தேவிக்கு மூலமந்திரம் எதுவும் கிடையாது. யாருக்காவது பிரசாதம் தேவைப்பட்டால் என்னுடைய  இ மெயில் முகவரிக்கு தகவல் அனுப்பினால்  நான் அவர்களுக்கு பிரசாதம் அனுப்பி வைப்பேன். பூஜை மற்றும் பிரசாதத்திற்காக நான் கட்டணம் எதுவும் வாங்க மாட்டேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடும் டாக்டர்கள் உட்பட அனைவரின் நலனுக்காகவும் நான் தினமும் பூஜை நடத்தி வருகிறேன். எனது பூஜைக்கு விரைவில் பலன் கிடைக்கும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona Devi Temple ,Kerala The Corona Goddess Temple Temple , Corona ,Goddess, Temple
× RELATED ஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில்...