×

கொரோனா பாதிப்பால் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 20 ஆண்டில் இல்லாத அளவு உயரும்: யுனிசெப் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உயரும் அபாயம்  இருப்பதாக யுனிசெப் எச்சரித்துள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் எதிர்கால உலகம் பல்வேறு இன்னல்களை சந்திக்க இருப்பதாக நாள்தோறும் பல்வேறு ஆய்வுகள்  எச்சரித்து வருகின்றன. அந்த வகையில், ஐநா.வின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப், குழந்தை தொழிலாளர் குறித்து அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா விளைவால் 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும்  அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.யுனிசெப்பும், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை கடந்த 2000ம் ஆண்டில் இருந்து கணிசமாக குறைந்து வருகிறது. தற்போது, உலகம் முழுவதும் 9 கோடியே 40  லட்சமாக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை சரிந்துள்ளது. இந்த முன்னேற்றம், கொரோனாவால் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. கொரோனாவால்  ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவால், 20 ஆண்டில் இல்லாத அளவுக்கு குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரிக்கும் அபாயம்  உள்ளது.

ஏற்கனவே மோசமான சூழலில், அதிக நேரம் வேலை பார்க்கும் குழந்தை தொழிலாளர்கள் நிலை, எதிர்காலத்தில் இன்னும் மோசமாகக் கூடும்.  இதனால் அவர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகக் கூடும். பெரும்பாலான குடும்பங்களின் வருமானம் பாதிக்கப்படுவதால் அவர்கள்  வேறுவழியின்றி குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதுபோல, வாழ்வாதாரத்தை இழந்த பெற்றோரால் குழந்தைகள் தொழிலாளர்களாக  மாறும் சூழல், பிரேசில், இந்தியா, மெக்சிகோ, தான்சானியா போன்ற நாடுகளில் அதிகளவில் ஏற்படலாம். கொரோனாவால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதும், குழந்தை தொழிலாளர்கள் பெருக ஒரு காரணமாக அமைகிறது. தற்போது, 130 நாடுகளில் 100 கோடி  குழந்தைகளின் படிப்பு பாழாகி உள்ளது. அடுத்ததாக பள்ளிகள் திறந்தாலும் கூட, வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் பல பெற்றோர்கள் தங்கள்  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் போகலாம்.

கொரோனா உச்சகட்ட வறுமையை அதிகரிக்கும். இது சில நாடுகளில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 0.7 சதவீதமாக உயர்வதற்கு வழிவகுக்கும்.  புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமின்றி, அவர்களின் குழந்தைகள் அடுத்த தலைமுறை  தொழிலாளர்களாக உருவாகவும் வாய்ப்புகள் அதிகமுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு அவசியம்
குழந்தை தொழிலாளர் அதிகரிக்காமல் இருப்பதற்கான தீர்வு குறித்து வலியுறுத்தி உள்ள யுனிசெப், ‘விரிவான சமூக பாதுகாப்பு, ஏழைகளும் எளிதாக  கடன் பெறும் வசதி, பெரியவர்களுக்கு கண்ணியமான வேலையை ஊக்குவித்தல், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப செய்தல், கல்வி  கட்டணத்தை நீக்குதல், தொழிலாளர் நலன் சார்ந்த சட்ட அமலாக்கம், ஆய்வுகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தை தொழிலாளர்கள்  அதிகரிக்காமல் தடுக்க முடியும். தரமான கல்வி, சமூக பாதுகாப்பு, சிறந்த பொருளாதாரம் வாய்ப்புகள் ஆகியவை திருப்புமுனையை  ஏற்படுத்துபவையாக அமையும்,’ என அறிக்கையில் கூறியுள்ளது.

* பெற்றோர்கள் வேலை இழந்துள்ளதால், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறும் சூழல் உள்ளது.
* பள்ளிக் கூடங்கள் மூடப்பட்டதும் கூட, குழந்தை தொழிலாளர்கள் பெருக காரணமாக அமைகிறது.
* 130 நாடுகளில் 100 கோடி குழந்தைகளின் படிப்பு பாழாகி உள்ளது. பள்ளிகளை திறந்தாலும் கூட, இவர்களில் பெரும்பாலோர் வேலைக்கு  செல்லக்கூடும்.  
* உலகம் முழுவதும் சில நாடுகளில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 0.7 சதவீதமாக உயரும்.
* புலம் பெயர் தொழிலாளர்களின் வருமானம் பாதிப்பதால், அவர்கள் வேறுவழியின்றி குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்றனர்.


Tags : corona half ,UNICEF , corona , UNICEF, warns ,child ,labor ,
× RELATED இந்தியா வல்லரசு ஆவதற்கான சூட்சுமங்களை பகிர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து