×

மராட்டிய அரசியலில் புறக்கணிக்கப்படுகிறதா காங்கிரஸ்? சிவசேனா கூட்டணியில் சலசலப்பு

மும்பை: மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கொள்கையில் முரண்பட்ட இந்த 3 கூட்டணியில் அவ்வப்போது சிறுசிறு உரசல்கள் வந்து செல்கிறது. தற்போது மாநிலத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அண்மையில் மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டங்களை தாக்கிய நிசர்கா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் மட்டும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனால் கூட்டணி அரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்தில் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சி தலைவர்கள் கருதுகிறார்கள். இதனால் கட்சி கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கூறுகையில், சில பிரச்சினைகள் தொடர்பாக கட்சிக்குள் சில அதிருப்தி உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேயுடன் கலந்துரையாடி தீர்வு காண விரும்புகிறோம் என தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 கட்சிகளின் ஆட்சி அமைக்கப்பட்டதும் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் சமமாக பகிர்வது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது என்று காங்கிரசின் மற்றொரு தலைவர் கூறினார்.

இந்நிலையில் மராட்டிய மேல்-சபையில் கவர்னர் ஒதுக்கீட்டில் காலியாகும் எம்.எல்.சி. பதவிகள், அரசு நடத்தும் வாரியங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான நியமனங்கள் ஆகியவற்றில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட், மந்திரி அசோக்சவான் ஆகியோர் நாளை முதல்வர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசுவார்கள் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : alliance ,Congress ,Maratha ,Shiv Sena , Maratha politics, boycott, Congress? Shiv Sena alliance, bustling
× RELATED அரசியலில் ஆர்வம் இருந்தால் காக்கி...