×

கொரோனா நோயாளிக்கு ஹேப்பி ஹைபாக்சியாவால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா?..டாக்டர் ஸ்ரீதரன் விளக்கம்

சென்னை: கொரோனா நோயாளிக்கு வரும் ஹேப்பி ஹைபாக்சியா நிலை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு  டாக்டர் ஸ்ரீதரன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து டாக்டர் ஸ்ரீதரன் கூறியதாவது: ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இதில் ஆக்சிஜன் உள்ளே செல்வதில் பிரச்னையோ, கார்பன்டை ஆக்சைடு வருவதில் பிரச்னையோ இருந்தால் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படுகிறது. நமது ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதை கண்டறிய 2 வழிகள் உள்ளது. ஒன்று தமனியில் இருந்து ரத்தத்தை எடுத்து, பிளட் கேஸ் மிஷனில் செலுத்தி ரத்தத்தில் ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு அளவை கண்டறியும் முறை. இதை தேர்ந்த நிபுணர்களால்தான் கையாள முடியும்.

ஆனால் தற்போது வந்துள்ள பல்ஸ்ஆக்சி மீட்டரை நம் விரலில் பொருத்தினால் ஆக்சிஜன் அளவை ெதரிந்து கொள்ளலாம். அதில் 90க்கு  குறைவானால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது என்று அர்த்தம், அந்த நிலை ஹைபாக்சியா எனப்படும்.  தற்போது ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 7, 8 நாட்களுக்கு பிறகு இந்தியாவில் 10 பேரில் 2 பேருக்கு பல்ஸ்ஆக்சி மீட்டரில் சோதனை செய்தால் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மிக குறைவாக அதாவது 70-80 வரைதான் உள்ளது.  ஆனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் அறிகுறி இல்லை. இது கொரோனாவால்தான், மற்ற சமயங்களில் ஆக்சிஜன் அளவு குறைந்தால் மூச்சு திணறல் ஏற்படும். ஆனால் கொரோனாவில் அப்படி இல்லை. இதன் விபரீதம் என்னவென்றால், ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தாலும், யாருக்கும் எந்த அறிகுறியும் ஏற்படுவதில்லை. இதனால் இதை ஹேப்பி ஹைபாக்சியா என்று கூறுகின்றனர்.

இதனை சைலன்ட் ஹைபாக்சியா என்று தான் கூற வேண்டும். ஹேப்பி ஹைபாக்சியா என்றால் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது என்பதுதான் பொருள். ஆனால், அறிகுறி தெரியாது என்பதால் இதனை ஹேப்பி ஹைபாக்சியா என்று கூறுகின்றனர். இது தவறு, அப்படி சொல்லக்கூடாது. இதுபோன்ற தகவல்கள் மக்கள் கவனத்தை திசை திருப்பும். மூச்சு திணறல் இல்லையென்றாலும் மற்ற அறிகுறிகள் இருக்கலாம்.

மேலும் சுவாசித்தல் பிரச்னை இல்லையென்றாலும், ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவதால் சில செயல்பாடுகள் குறையும்.  மூளை செயல்பாடுகள் தெளிவாக இல்லாமல் இருக்கலாம். எனவே ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை பல்ஸ்ஆக்சி மீட்டரை வைத்து அவ்வப்போது சோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். பாதிப்பு  எண்ணிக்கை அதிகமாகுவதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே ஆக்சிஜன் அளவை கண்காணித்து வர வேண்டும். அப்படி குறையும் பட்சத்தில் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். சைலன்ட் ஹைபாக்சியா வந்தால் நாம் உயிரிழந்து விடுவோம் என மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

உரிய சிகிச்சை அளித்து சரி செய்யலாம். கொரோனா சைலன்ட் ஹைபாக்சியாவால் பாதிக்கப்படும் ஒருவர் அதனால் மட்டுமே இறந்து விடுவதில்லை. அவர் இறப்பதற்கு வேறு காரணங்கள் இருந்து இருக்கலாம், ரத்தம் உறைதல், மூளைக்கு போகும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறக்கலாம், நீரிழிவால் இறக்கலாம், ரத்த அழுத்தம், கிட்னி பிரச்னை ஏற்பட்டும் இறக்கலாம்.

மேலும் இந்தியாவில் பலி எண்ணிக்கை மிகவும் குறையும். அதில் சைலன்ட் ஹைபாக்சியாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதை வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். சைலன்ட் ஹைபாக்சியா நீண்ட நாட்கள் இருக்காது, 2 மூன்று நாட்களில் மூச்சு திணறல் ஏற்படும். கொரோனா நோயாளிகளுக்கு உடல் சோர்வு, இருமல், தொண்டை வலி, காய்ச்சல் முதலிய வெளிப்பாடுகளில் ஏதேனும் சில நாள்பட்ட ரத்த அழுத்தம், இதய நோய் , நுரையீரல் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு போன்ற தொல்லைகள் இருப்பவர்களுக்கு பாதிப்பின் வீரியமும், இறப்புக்கான சாத்தியக்கூறும் அதிகம்.

ஆக்ஸிஜன் குறைபாடு மட்டுமே மரண விகிதத்தை அதிகம் செய்யாது. சைலன்ட் ஹைபாக்சியா என்பது பற்றி அறிந்து கொண்டு பல்ஸ்ஆக்ஸிமீட்டர் மூலம் அதை கவனித்துக் கொண்டு இருப்பது அவசியம். அவசியம் அற்ற பயம், மரண பயம் அடைவது தவறு. ஹைபாக்சியா வந்தவர்கள் எல்லோரும் இறப்பதில்லை. குணப்படுத்திவிடலாம்.  இவ்வாறு டாக்டர் ஸ்ரீதரன் கூறினார்.

Tags : Sridharan ,patient , Can, patient ,coronary heart disease, suffer , hypoxia? Dr. Sridharan
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...