×

ஒருநாள் கூட விடுமுறை தராத நிலையில் டியுசிஎஸ் ரேஷன்கடை ஊழியர் கொரோனாவுக்கு பலி: ரூ.50 லட்சம் வழங்க தொமுச கோரிக்கை

சென்னை: டியுசிஎஸ் ரேஷன் கடையில் பணியாற்றி வந்த 42 வயதே ஆன ஊழியர் நேற்று கொரோனா வைரஸ் காரணமாக மரணம் அடைந்தார். இவரின் குடும்பத்துக்கு அரசின் மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று தொமுச சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அரசு கூறினாலும், ரேஷன் கடை ஊழியர்கள் மட்டும் ஒருநாள் கூட விடுமுறை இல்லாமல் பணிக்கு வந்தனர். ரேஷன் கடை ஊழியர்கள் மூலம்தான் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1000 வழங்கப்பட்டது.

இப்படி தினசரி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால், கொரோனா ஆபத்து ஏற்படும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அரசு விடுமுறை அளிக்காமல், ரேஷன் கடை ஊழியர்களுக்கு தினசரி 200 ரூபாய் அலவன்ஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்த பணம் கூட காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை, சைதாப்பேட்டை 5ல் உள்ள டியுசிஎஸ் பணியாளர் சுரேஷ் 42, என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் லேசான காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார்.

இதுகுறித்து தொமுச பேரவை செயலாளர் பொன்ராம் கூறும்போது, “தமிழக மக்களின் பட்டினி சாவை தடுத்திட கூட்டுறவு மற்றும் டியுசிஎஸ் ரேஷன் கடை ஊழியர்கள் தினசரி பணிக்கு வந்தனர். ஆனால் அதிமுக அரசு ரேஷன் கடை ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவில்லை. இதனால் ஒரு ஊழியர் மரணம் அடைந்துள்ளார். இறந்த ஊழியரின் குடும்பத்திற்கு, அரசின் மருத்துவ காப்பீடு தொகை ₹50 லட்சம் வழங்கிட வேண்டும். அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் தாமதம் செய்யாமல் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்” என்றார். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளது.

Tags : ration worker ,DUSS ,korona ,TUCS , TUCS ration, worker, korona kills, Rs. 50 lakhs demanded
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 6,915,439 பேர் பலி