×

குப்பை வண்டியில் சடலம் ஏற்றிய விவகாரம்; கொடூரத்தின் உச்சத்தை கடந்த மனித உரிமை மீறல்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம், பல்ராம்பூர் மாவட்டம் உத்ராவுலா நகரில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தின் முன் 42 வயதுடைய ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவருக்கு கொரோனா வந்திருக்குமோ என அஞ்சி அவரின் உடலை குப்பை அள்ளும் வண்டியில் குப்பைபோடு குப்பையாக நகராட்சி ஊழியர்கள் 4 பேர் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் 3 போலீசாரின் மேற்பார்வையில்தான் நடந்தது. இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானதையடுத்து நகராட்சி ஊழியர்கள் 4 பேர், போலீசார் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊடகங்களில் இந்த செய்தியைப் பார்த்த தேசிய மனித உரிமை ஆணையம், சிறுபான்மையினர் நல ஆணையம் உத்தரப்பிரதேச அரசு, பல்ராம்பூர் நகராட்சி ஆணையர், உத்தரபிரதேச போலீ்ஸ் டிஜிபி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ‘சாலையில் ஒருவர் விழுந்து உயிரிழந்தபின் அவரின் உடலை நகராட்சி ஊழியர்கள் குப்பை வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியளித்தது. அரசு ஊழியர்களிடம் இருந்து இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு வெட்கமாகவும், மனித நேயமற்ற முறையிலும் இருந்தது.

அதிகாரிகள் கடமையை செய்ய மட்டும் தவறவில்லை, கொடூரத்தின் உச்சத்தைக் கடந்து செயல்பட்டு தீவிரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்கள். கொரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது இறந்தவர்களி–்ன் உறவினர்களுக்குத் தேவையற்ற இடையூறை அளிக்காமல் இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான அறிக்கையை பல்ராம்பூர் நகராட்சிஆணையர், தலைமைச் செயலாளர் , போலீஸ் டிஜிபி ஆகியோர் 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

Tags : National Human Rights Commission , Garbage, corpse, human rights violation, National Human Rights Commission, notice
× RELATED தூத்துக்குடி துப்பாக்கி சூடு...