×

இந்திய செவிலியரின் சேவையை வெகுவாக பாராட்டிய ஆடம் கில்கிறிஸ்ட்: புனிதமான சேவையை மென்மேலும் தொடர வாழ்த்து!

பெல்லிங்கன்: ஆஸ்திரேலியாவின் முதியோர் இல்லத்தில் பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவரின் சேவையை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் வெகுவாக பாராட்டியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்த ஷெரோன் வர்கீஸ் தனது மேற்படிப்பை ஆஸ்திரேலியாவில் மேற்கொண்டார். அங்குள்ள வெல்லங்காங் பல்கலைக் கழகத்தில் செவிலியர் பிரிவைத் தேர்வு செய்து படித்த அவர், தனது 23வது வயதில் படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கொரோனா பரவுவதற்கு முன்பே ஆஸ்திரேலியாவில் தன்னை செவிலியராகப் பதிவு செய்து கொண்டார் ஷெரோன். அவருக்கு செவிலியராகப் பணிபுரியும் வாய்ப்பு வந்தது. இருப்பினும், அங்குள்ள முதியோர் காப்பகத்தில் பணிக்குச் சேர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவிய காலம் முதல் ஷெரோன் வர்கீஸ் தன்னலம் பாராது அங்குள்ள முதியோர் இல்லத்தில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளை சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம்குறித்து வீடியோ வெளியிடுமாறு ஆஸ்திரேலியாவின் வர்த்தகம், கல்வி மற்றும் முதலீட்டுக்கான அரசு அமைப்பான ’ஆஸ்டிரேட்’ அழைப்பு விடுத்திருந்தது. அதில், ஷெரோன் தன் பணிகள் குறித்துப் பேசியிருந்தார். வீடியோ பதிவில் பேசிய ஷெரோன் வர்கீஸ், கிரீன்ஹெல் மேனர் முதியோர் இல்லத்தில் கொரோனா நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம். ஷிஃப்ட் முறையில் பணிக்கு வருபவர்களின் உடைமூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம். நீண்ட தூரங்களில் இருந்து வருபவர்களுக்குப் பதிலாக, உள்ளேயே தங்கியிருந்து பணியாற்ற முக்கியத்துவம் கொடுத்தோம்.

முதியோர்களின் உறவினர்கள் வந்து பார்க்க ஆரம்பத்தில் அனுமதித்தாலும், நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் உறவினர்களையும் அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் முதியோரைப் பாதுகாத்தோம், எனக் குறிப்பிட்டிருந்தார். ஷேரன் வர்கீஸ் பணியை ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியுள்ளது. அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகாப்தமாக விளங்கும் ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார். அதில், கொரோனா பரவல் காலகட்டத்தில் ஷெரோன் முதியோர் இல்லத்தில் தன்னலம் கருதாது சேவையாற்றி வருகிறார். புனிதமான இந்தச் சேவையை அவர் மென்மேலும் தொடர எனது வாழ்த்துகள். அவரின் இந்த தன்னலமற்ற சேவையை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சார்ந்தவர்கள் பெருமையாகக் கருதுவார்கள், என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அந்த செவிலியர் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

Tags : Adam Gilchrist ,Indian Nurse ,nurse ,Indian , Indian Nurse, Sharon Varghese, Adam Gilchrist, Australia
× RELATED சைரன் விமர்சனம்