×

கொரோனா பாதித்த நிலையில் தற்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை: டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் தகவல்

சென்னை: கொரோனா பாதித்த நிலையில் தற்போதைக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் அரசுப் பணிக்காக தேர்வு மூலம் அதிகளவில் தேர்வு செய்யப்படுவது தமிழகத்தில்தான். டிஎன்பிஎஸ்சி மூலம் தமிழகத்தில் ஆட்சிப் பணி உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு ஏப்ரலிலும், குரூப்-2 தேர்வு ஜூலையிலும் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது, தமிழகத்தில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் செயலாளர் கூறியுள்ளார். மேலும், தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு தேர்வு நிச்சயம் நடத்தப்டும். தேர்வு நடத்துவதற்கு முன்பு 3 மாத கால அவகாசம் வழங்கப்படும். குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே போதிய இடைவெளி தரப்படும். மாணவர்கள் தொடர்ந்து குரூப் தேர்வுகளுக்குத் தயாராகலாம் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.



Tags : Corona ,TNPSC ,Corporations ,DNPSC , Corona, TNPSC, Examinations, Secretary Nandakumar
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.