×

அரசுப்பள்ளி 11,12ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆன்லைன் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!

சென்னை: தமிழகத்தில் கணித ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு கணித ஆசிரியர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற 10 நாள் ஆன்லைன் சிறப்பு பயிற்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. முதுநிலை பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு e - box நிறுவனம் சார்பில் ஆன்லைனில் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கணித பாடத்தை மேலும் எளிதாக்கவும், ஆழமாக கற்பிக்கும் வகையிலும், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் குறித்த புரிதலை மேம்படுத்துவதற்காகவும் இ - பாக்ஸ் என்ற நிறுவனம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. ஜூன் 22 முதல், ஜூலை 1 வரை நடைபெறும் இந்த ஆன்லைன் பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்றும் www.eboxcolleges.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய அறிவுறுத்தலை வழங்க பள்ளி கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் உள்ள கணிதப் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றபோதும் , கணிதம் கற்பதன் நோக்கம் குறித்தும் அதன் பயன்பாடுகள் குறித்தும் மேலும் அறிந்து கொள்ள இப்பயிற்சி வழிவகுக்கும். இந்தப் பயிலரங்கு கணிதப் பாடத்தில் திறன்மிக்கவர்களாகவும் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் கணித ஆசிரியர்களை மேம்படுத்தச் செய்யும் . 10 நாள் பயிலரங்கு முடியும்போது , ஒவ்வொரு ஆசிரியரும் 100 நிகழ்நேரப் பயிற்சிகளுக்கு விடைகண்டு , திறமையான மாணவர்களை உருவாக்கும் திறன் பெற்றிருப்பார்கள் . ஒவ்வொரு ஆசிரியரின் பயில்தல் வளைகோடு குறித்துப் பயிலரங்கின் இறுதியில் விரிவான அறிக்கையை ஈபாக்ஸ் வழங்குவார்கள். நீட் பயிற்சியைத்  தொடர்ந்து இந்தப் பயிற்சியையும் E - Box நிறுவனமே வழங்குவது குறிப்பிடத்தக்கது.


Tags : Special School Training for Mathematics Teachers of 11th & 12th Grade ,math teachers , Government school, 11th standard, math teacher, online training school
× RELATED பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள்...