×

ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு: சக ஊழியர்கள் 10,000 பேர் உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு!

பெல்லாரி: ஊரடங்கு தளர்வு காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் தற்போது துரிதமாக உற்பத்தி பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஜிந்தால் எஃகு தொழிற்சாலையில் பணியாற்றிய 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனெனில், ஜூன் 4ம் தேதியன்று தமிழகத்தின் லேசம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் தொழிற்சாலைக்கு பணிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்பின், தொடர்ச்சியாக தொழிற்சாலையானது இயங்கி வந்த நிலையில், தற்போது அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என மொத்தம் 95 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தொழிற்சாலையில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் வேலை செய்த 100க்கும் மேற்பட்டோர், ஏற்கனவே தனமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலருக்கு தொற்று அறிகுறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 10,000 தொழிலாளர்கள் உடனடியாக அவரவரது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த வனத்துறை அமைச்சர் அனந்த்சிங் தலைமையில் ஜிந்தால் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், ஜிந்தால் தொழிற்சாலையின் பிரத்யேக மருத்துவமனையான சஞ்சீவனி மருத்துவமனையை தற்போது முழு நேர கொரோனா சிகிச்சை மருத்துவமனையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு தொழிலாளர்கள் அனைவருக்கும் துரிதமாக பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தொழிற்சாலையை முழுவதுமாக மூட முடியாத காரணத்தால் கொதிகலன்களை மட்டும் பராமரிப்பதற்காக மிக குறைந்த அளவில் தொழிலாளர்களை கொண்டு இயங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஜிந்தால் தொழிற்சாலை முழுவதும் கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் யாரும் தொழிற்சாலைக்கு வர வேண்டாம் என்றும், பெல்லாரி சுற்றுவட்டார மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.


Tags : factory ,colleagues ,Jindal Steel , Jindal Steel Factory, Corona, Bellary, Karnataka
× RELATED இந்தியாவில் புதிய உச்சம்: ஒரே நாளில் 45,720 பாதிப்பு பலி எண்ணிக்கை 1,129 பேர்