×

நெல்லை மாநகரில் பயணிகள் திண்டாட்டம் ஸ்மார்ட் சிட்டியில் உருப்படியாக ஒரு பஸ் நிலையம் கூட இல்லை: வாகன ஓட்டிகளை பதம் பார்க்கும் சாலைகள்

நெல்லை: கொரோனா ஊரடங்கிற்கு பின் சகஜ வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருந்தாலும், ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள நெல்லை மாநகரில் உருப்படியாக ஒரு பஸ் நிலையம் இன்றி பயணிகள் தவிக்கின்றனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம் பெற்றுள்ள நெல்லை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் ெதாடங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் பிரமாண்ட திட்டமாக கருதப்படும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் 3 அடுக்குமாடி கட்டிடங்களோடு ரூ.78 கோடியில் மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பணிகள் தொடங்கியபோது 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 18 மாதங்கள் முடிந்த பின்னரும், பஸ்நிலையம் இடிக்கப்பட்ட நிலையிலேதான் காட்சியளிக்கிறது. அதற்கான பணிகள் முழுவீச்சில் தற்போது வரை தொடங்கவில்லை.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு மாற்று பஸ் நிலையமாக அறிவிக்கப்பட்ட பொருட்காட்சி மைதானம், காய்கறி மார்க்கெட்டாக மாறியது. பின்னர் இப்போது அங்கு வர்த்தக மையம் அமைக்கும் பணிகள் ெதாடங்கியுள்ளன. இதன் காரணமாக நெல்லை சந்திப்புக்கு வரும் பஸ்கள், டவுன் ரதவீதிகளையெல்லாம் சுற்றி, எதிலாவது 10 நிமிடங்கள் நிற்க இடம் கிடைக்காதா என அல்லோலப்பட்டு, வேறு வழியின்றி வெளியேறி விடுகின்றன. நெல்ைல சந்திப்பு மற்றும் டவுன் பகுதிகளில் உள்ள ஆங்காங்கே காணப்படும் நிறுத்தங்களை மட்டுமே நம்பி பஸ்கள் பயணிக்கின்றன. கொரோனா ஊரடங்கிற்கு முன்பே அடிப்படை வசதிகள் இன்றி காட்சியளித்த நெல்லை புதிய பஸ் நிலையம், தற்போது இடநெருக்கடியில் விழி பிதுங்குகிறது. நயினார்குளம் மார்க்கெட் மூடைகளும், சரக்கு வாகனங்களும், அரசு பஸ்களும் அங்கு ஒரே சமயத்தில் சங்கமிப்பதால், பயணிகள் பஸ்சில் ஏறி இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். பயணிகள் அமர வேண்டிய இடங்களில் எல்லாம் காய்கறி மூடைகள் ஆக்கிரமிக்கின்றன. சுமை தூக்கும் தொழிலாளர்கள் அடிக்கடி மூடைகளோடு வேகமாக நடந்து வருவதால், பஸ் ஏற வரும் பெண்கள் தட்டுதடுமாறி செல்கின்றனர்.

நெல்லை புதிய பஸ் நிலையமும், நயினார்குளம் மார்க்கெட்டும் ஒரே இடத்தில் இருப்பதால் அங்கு சமூக இடைவெளிக்கான சாத்தியக்கூறுகளும் குறைந்து வருகின்றன. காய்கறி கழிவுகள், அழுகிய காய்கறிகள் பஸ் நிலையத்தில் ஆங்காங்கே தென்படுகின்றன. இதனால் பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.  நெல்லை பஸ்நிலையங்களின் அவலம் ஒருபுறமிருக்க, மாநகராட்சியில் உள்ள சாலைகளும் வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றன. அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் குழாய்கள் பதிப்பால், நெல்லை டவுனில் உள்ள அனைத்து சாலைகளுமே மிக மோசமாக காட்சியளிக்கின்றன. நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும், குழிகளுமாக காணப்படுகிறது. தெற்கு மவுண்ட் ரோடு, நயினார்குளம் சாலை ஆகியவையும் பெயர்ந்து காணப்படுகின்றன. டவுன்- பேட்டை சாலையும் மேடு, பள்ளமாக காட்சியளிப்பதோடு, பாதாள சாக்கடை உடைப்பால் வாகனங்களை தள்ளாட வைக்கிறது. நெல்லை மாநகர சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், சாலைகள் சிதிலமடைந்து வருகின்றன.

Tags : bus station ,Paddy City ,city ,Roads ,motorists ,Smart City , Smart City , not even, bus station , Paddy City:
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்