×

களக்காட்டில் புதர் மண்டிய குளங்கள் தூர்வாரப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

களக்காடு:  களக்காட்டில் புதர் மண்டி கிடக்கும் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  களக்காடு கப்பலோட்டிய தமிழன் தெரு அருகே செண்பகாதேவி குளம் என்ற வட்டகுளம், நெடுங்குளம் ஆகிய குளங்கள் உள்ளன. இந்த குளங்களுக்கு மூங்கிலடி நாங்குநேரியான் கால்வாயில் இருந்து வெப்பல் ஓடை வழியாக வரும் கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த 2 குளங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள 220 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிரிட்டுள்ளனர்.  களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட இந்த 2 குளங்களும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தில் காடுபோல அமலை செடிகள் முளைத்துள்ளன. மேலும் செடி, கொடிகள் அடர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. குளங்களில் நீர் தேங்கும் பகுதிகளில் மண் மேடுகளும் உருவாகியுள்ளன. இதனால் குளத்தில் போதியளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. மேலும் குளங்களில் உள்ள தண்ணீர் விரைவில் வற்றி விடுவதால் பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எழுந்து வருகிறது.

வட்டக்குளத்தின் கரையில் உள்ள படித்துறையும், விநாயகர் கோயிலும் செடிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. புதர்களில் பதுங்கியிருக்கும் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் கரையோரங்களில் உலா வருவதால் விவசாயிகள் வயல்களுக்கு செல்லவே அச்சப்படுகின்றனர். இதுகுறித்து களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. பொறுப்பாளர் முருகன், விவசாயி அருள் கூறுகையில், ‘புதர் மண்டி கிடக்கும் இந்த 2 குளங்களையும் தூர்வார வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறோம் தமிழக முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் மனுக்கள் மூலம் முறையிட்டுள்ளோம். ஆனால் குடிமராமத்து திட்டத்திலும் இந்த குளங்கள் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு விட்டது. எனவே குளங்களை தூர்வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kalakkad , shrub ponds ,sprout ,Kalakkad ,Farmers' expectation
× RELATED அறுவடை சீசன் தொடங்கியுள்ளதால்...