×

கொரோனாவால் சீனா, வியட்நாம் நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் வராமல் கருகிய ஊதுபத்தி தொழில்

* வாழ்வாதாரம் தொலைத்த 10 ஆயிரம் பேர்
* சோகமயமான நறுமணம் வீசிய வாழ்க்கை

வேலூர்: கொரோனாவால் சீனா, வியட்நாமில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதி தடைபட்டதால் ஊதுபத்தி தொழில் முடங்கி 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாடுகளிலும் முக்கியத்துவம் பெறுபவை நறுமணம் வீசும் ஊதுபத்திகளாகும். இவை இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் அதிக கிராக்கியுள்ள பொருளாகும். வீடுகள் மற்றும் கோயில்களில் தெய்வீக நறுமணத்தை பரப்புவது மட்டுமல்ல, மனதை ஒருமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுபவை ஊதுபத்திகள். தமிழகத்தில் மிக எளிய முறையில் வீட்டிலேயே குடிசைத்தொழில் போல இந்த ஊதுபத்தி தயாரிப்புத்தொழிலில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதற்கு தேவையான அடிப்படை மூலப்பொருள்களாக மூங்கில் குச்சிகள், நறுமணத்துக்காக சில பொடிகள் மற்றும் சந்தனம், மல்லிகை, ரோஜா போன்ற வாசனை திரவிய எண்ணெய் கலந்து நறுமணம் மிக்க ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. ஊதுபத்தி கைத்தொழிலாக மட்டுமின்றி, தானியங்கி மற்றும் பகுதி தானியங்கி இயந்திரங்களாலும் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஊதுபத்தி உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் சிறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை அனைத்தும் முடக்கத்தை சந்தித்துள்ளன. ஒவ்வொரு துறையும் கடும் சரிவை நோக்கி சென்று வருகின்றது. நாட்டின் தொழிற்துறை எப்போது நிலைத்தன்மைக்கு வரும் என்ற கேள்வி எழுந்து வருகிறது. குடிசை தொழிலாக கருதப்படும் ஊதுபத்தி தொழிலும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. ஊதுபத்தி தயாரிப்புக்கு முக்கியமான மூங்கில் குச்சிகள், நறுமண பொருட்கள் சீனா, வியட்நாம் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக கொரோனா காரணமாக மேற்கண்ட மூலப்பொருட்கள் வருவது தடைப்பட்டுள்ளது. இதனால் முடக்கத்துக்குள்ளான ஊதுபத்தி தொழிலால், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி, வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ₹23 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொரோனாவால் நலிவடைந்த தொழில்களை மீட்க ₹20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது குடிசை தொழிலான ஊதுபத்தி தொழிலை மீட்கவும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது போல குடிசைத்தொழிலுக்கும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து வேலூரை சேர்ந்த ஊதுபத்தி தொழிற்சாலை நடத்தும் பி.எஸ்.பழனி கூறியதாவது: ஊதுபத்திக்கு மூலப்பொருட்கள் அனைத்தும் சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் இருந்தே அதிகளவில் இந்தியாவுக்கு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நலிவடைந்த நிலையில் இருந்த இந்த தொழில் கடந்த 6 மாதங்களாக மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் செயல்பட தொடங்கிய சில மாதங்களில் மீண்டும் முடங்கி உள்ளது. ஒவ்வொரு தொழிலாளரும் மாதந்தோறும் ₹8 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை ஊதியம் பெற்று வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்தும் அப்படியே முடங்கியது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட இயந்திரங்களை கொண்டு ஊதுபத்தி தயாரிக்கப்படுகிறது. இதுதவிர வீடுகளில் பெண்கள் அதிகளவில் தயாரித்து கொடுத்து வந்தனர். இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது ஒருசில இடங்களில் 10 பேர் செய்யக் கூடிய தொழிற்கூடத்தில் 2 பேர் கூட வேலை செய்யவில்லை.

சில இடங்களில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருந்த ஊதுபத்தி பண்டல்கள் அப்படியே குடோனில் தேங்கிக் கிடக்கின்றன. மார்ச் முதல் ஜூன் மாதம் வரை கோயில் திருவிழாக்கள் அதிகமாக நடக்கும் காலம். ஆனால் கொரோனாவால் எந்தவித திருவிழாவும் நடக்கவில்லை. வியாபாரமும் இல்லை. மூலப்பொருட்களும் இல்லாமல் பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள ₹20 லட்சம் கோடியில் ஊதுபத்தி மற்றும் மெழுகுவர்த்தி போன்ற தொழிலுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க மத்திய மற்றும் மாநில அரசுக்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

* வேலூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகி, வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
* இந்த தொழிலை நம்பி 10 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது ஒருசில இடங்களில் 10 பேர் செய்யக் கூடிய தொழிற்கூடத்தில் 2 பேர் கூட வேலை செய்யவில்லை.


Tags : Corona ,Vietnam ,China , Corona ,non-profit industry ,raw materials,China and Vietnam
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...