×

ஆத்தூர் அருகே 50க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி கடத்தல்?

ஆறுமுகநேரி: ஆத்தூர் அருகே சாலையோரம் இருந்த பசுமையான மரங்கள் அடியோடு வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், மேலஆத்தூர் அருகே சில ஆண்டுகளுக்கு முன் துணை மின் நிலையம் அமைக்கும் பணியினை மின்சார வாரியம் மேற்கொண்டது. இப்பணியில் புதிய மின் பாதை அமைக்கும் போது மின் வயர்களுக்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் கிளைகள் வெட்டப்பட்டன.   இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மின் தடை செய்யப்பட்ட நாளில், ஆத்தூரில் இருந்து மேலாத்தூர் செல்லக்கூடிய பாதையில் உள்ள பனை, வேம்பு உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்களை அடியில் இருந்து முழுவதுமாக வெட்டியுள்ளனர். மேலும் 100 நாள் வேலைதிட்டத்தில் நட்டப்பட்ட மரங்களும் வெட்டப்பட்டுள்ளன. சில வெட்டப்பட்ட மரங்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மின்சார வாரியத்திற்கு, மின் பாதையில் செல்லும் மரங்களின் கிளைகளை மட்டுமே வெட்டுவதற்கு அனுமதியுள்ளது. சாலையோர பச்சை மரங்களை முழுவதுமாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். எந்தவித அனுமதியுமின்றி மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மரங்கள் வெட்டி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பனைமரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளது மிகவும் வேதனையாக உள்ளது  என்றனர். இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட பச்சை மரங்களை அனுமதியின்றி வெட்டி அகற்றப்பட்டுள்ளதால் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.  


Tags : Attur Attur , Over 50 trees, cut , near ,Attur
× RELATED ஆத்தூரில் குடியுரிமை...