×

கொரோனா தொற்று காரணமாக கோயிலுக்கு வந்த பக்தர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான மணப்பாக்கம் கன்னி கோயில் உள்ளது. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுதும் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை மக்கள் சிலர், குலதொய்வ வழிபாடு  என கூறி, மணப்பாக்கம் கன்னி கோயிலுக்கு நேற்று காரில் வந்தனர். அங்கு, கோயிலில் அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களை தொடர்ந்து, பலர் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

இதையறிந்ததும், கிராம மக்கள் அங்கு திரண்டனர். கோயிலுக்கு வந்த மக்களை வழியிலேயே மறித்து நிறுத்தி, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அதன் தாக்கம் எங்கள் கிராமத்தில் பரவ கூடாது என கூறினர். மேலும், வெளி மாவட்ட பக்தர்கள் வரக்கூடாது என ஊர் எல்லையில், மரக் கிளைகளை வெட்டி வைத்து, கட்டைகளால் தடுப்புகள் அமைத்து கார்களை உள்ளே விடாமல் தடுத்தனர். பின்னர் நடந்து சென்றவர்களையும், தடுத்து நிறுத்தினர். இதனால்,  இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பக்தர்கள் கோயிலுக்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லை, அதே நேரத்தில், கொரோனா பரவலால், எங்கள் ஊர்மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, தடுத்து நிறுத்துகிறோம்.

ஊரடங்கு நேரத்தில் மக்கள் அதிகம் கூடும் வழிப்பாட்டு தலங்களை திறக்க அரசு தடை விதித்துள்ளது ஆனால், கோயில் நிர்வாகம் தடையை மீறி சென்னை  பக்தர்களுக்கு போன் மூலம் தரிசனம் நடப்பதாக கூறி வரவழைத்து கோயிலை திறந்து விட்டுள்ளது என்றனர்.


Tags : pilgrims ,Villagers Who Stopped The Pilgrims Who Came To The Temple Coronavirus , Corona, temple, devotees, villagers
× RELATED சென்னையிலிருந்து தனி விமானம் மூலம்...